இந்தியாவுடன் நட்புறவு மட்டுமன்றி அதற்கு மேலான உறவும் எமக்குண்டு
இந்தியாவுடன் நட்புறவு மட்டுமன்றி அதற்கு மேலான உறவும் எமக்குண்டு எனவும் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை உயிருடன் பிடிக்கவே விரும்பியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நாடும் எம் மண்ணில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோமென புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்தத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்தே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வழங்கிய பேட்டியொன்றில் அவர் தெரிவித்திருப்பதாவது;
பிரபாகரனை உயிருடன் கைது செய்யவே நாம் விரும்பினோம். அவ்வாறு கைது செய்தால் அவரை இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான விசாரணைகளுக்காக இந்தியாவிற்கு அனுப்ப முடியும். அதன் பின் அது இந்தியாவின் பிரச்சினை என்றார்.
விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தில் வெற்றி பெற்றதன் பின்னர் எவ்வாறு உணர்கிறீர்கள் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கேட்கப்பட்டபோது, 30 ஆண்டுகளின் பின்னர் பயங்கரவாதத்தை ஒழித்துள்ளோம். அத்துடன் நாம் ஒன்றிணைந்ததுடன் முழுநாட்டையும் ஒன்றிணைத்துள்ளோம். எனவே, நிம்மதியை உணர்கிறேன் எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து தனது வெற்றியின் இரகசியம் பற்றித் தெரிவித்த ஜனாதிபதி படைகளை ஒன்றிணைத்ததுடன் யுத்தமுனையில் தளபதிகளை போர்புரியச் செய்தேன். அத்துடன் அவர்களுக்கு எனது ஆதரவையும் வழங்கினேன் என்றார்.
மேலும் யுத்தத்தினால் அழிந்துள்ள நாட்டை மீள்கட்டமைப்புச் செய்வதற்கு உடனடி அயல்நாடான இந்தியா உதவி வழங்குமெனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இலங்கை சீனாவிடமிருந்து ஆயுதங்களைப் பெற்றமை தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு எவ்வாறென்பதை விளக்குகையில் ஏனைய நாடுகளைப் போல சீனாவும் எமது நட்பு நாடுகளில் ஒன்றாகும். மேலும் யாரிடமிருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்யமுடியுமோ அங்கிருந்தே கொள்வனவு செய்தோம். இது தொடர்பாக இந்தியா வருத்தப்படத் தேவையில்லை. மேலும் இந்தியாவுடன் நட்புறவு மட்டுமன்றி அதற்கு மேலான உறவும் எமக்குண்டு எனத் தெரிவித்தார்.
மேலும் இந்தியா பரந்த மனப்பான்மை உடைய நாடு. இந்தியாவுக்கு எதிராக எந்தவொரு நாடும் எம் மண்ணில் நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் அனுமதிக்கமாட்டோம் என்றார்.
அத்துடன் இடம்பெயர்ந்து வாழும் மக்களை அவர்கள் கிராமங்களில் மீளக்குடியமர்த்தவும் அங்கு கண்ணிவெடிகளையகற்றி வீதிகளைப் புனரமைத்து முழுமையான மீள்கட்டமைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுலாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் தெரிவித்ததாக பி.ரி.ஐ.செய்திச்சேவை தெரிவித்தது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply