உடையத் தொடங்கும் புலம்பெயர்ந்த புலிகள்
கிட்டத்தட்ட புலிகளின் அனைத்து மேல்மட்ட தலைமைகள் உட்பட அந்த அமைப்பின் தலைவர் பிரபாகரன் போன்றோரின் மறைவுக்கு பின் புலிகளின் எதிர்காலம் என்ன என்பது இலகுவில் விடை சொல்லிவிடக் கூடிய ஒன்றுதான். ஆரம்பத்தில் பிரபாகரன் இறந்ததை மறுத்திருந்த புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. இன்று (மே 24) சர்வதேச ஊடகங்களுக்கு மே. 17ல் முல்லைத்தீவு பிரதேசத்தில் பிரபாகரன் இராணுவத்தால் கொல்லப்பட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி.யின் அறிக்கையை, பிரகடனப்படுத்தப்படாத புலிகளின் உத்தியோகபூர்வ இணையங்களான தமிழ்நெற், புதினம் போன்றவை வெளியிடுவதைத் தவிர்த்துள்ளன. ஆனால், சங்கதி, பதிவு போன்ற இணையங்கள் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி.யின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து தமிழ் நாட்டைச் சேர்ந்த பழ. நெடுமாறன் அவர்களின் அறிக்கையை வெளியிட்டுள்ளன. வேறு சில தமிழ் இணையங்கள் தமிழக அரசியற் கட்சியான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்ற கழக தலைவர் வை.கோ. அவர்களின் மறுப்பறிக்கையை வெளியிட்டுள்ளன.
இன்று பி.பி.சி தமிழோசைக்கு புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. அளித்த செவ்வியில் புலிகள் அமைப்பு இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து புலிகள் அமைப்பு வன்முறைகள் அற்ற வழிமுறைகளில் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்காக அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளுடனும் இணைத்து ஜனநாயக ரீதியில் பணியாற்றும் என்பதாக தெரிவித்துள்ளார்.
புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி.யின் தகவல்கள் உண்மையற்றவையென வலிந்து தாக்கும் சில தமிழ் இணையங்கள் `பொய்ச் செய்தி மீதான விவாதங்களைத் தவிர்த்து விட்டு இலட்சியத்தை முன்னெடுப்பதற்காகத் துணைநிற்கும் முயற்சிகளிலும் நடவடிக்கைகளிலும் நாம் ஈடுபட வேண்டும்` என வீம்புக்கு கதை அளக்கின்றன.
பிரபாகரனின் மரணத்தை ஏற்றுக்கொண்டு, ஆற்ற வேண்டிய அரசியல் கடமைகளை நிராகரிக்கும் புலம்பெயர் புலிகளின் ஒருசாரார் மீதி தமிழ் மக்களையும் `இல்லாத ஊருக்கு செல்லாத பாதையில் பயணிக்கக்` கோருவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
ஆனால் புலம்பெயர்ந்த புலிகளின் மறுசாரார் கடந்த கால தமது அரசியல் தவறுகளில் இருந்து தாம் கற்றுக்கொண்ட பாடம், இலங்கையில் வாழும் மிச்சம் மீதி தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் வாழ்வுக்கு பயனுள்ள வழியில் ஆக்கபூர்வமாக செயலாற்ற உதவுமென நம்புகிறார்கள்.
புலிகள் தலைமைகளின் அழிவுக்குபின் தமிழ் அரசியல் சூழல் புதிய பாதையில் முன் நகரும் போக்கு நம்பிக்கை தருவதாக அமைகிறது.
யுத்தத்தால் வன்னியில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்களது மீள் குடியேற்றமும், யுத்தத்தில் சரணடைந்த பத்தாயிரத்துக்கு அதிகமான போராளிகளது புனர்வாழ்வும் குறித்து அதிக கரிசனை செலுத்த வேண்டியதே, புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தொடர்ந்து அழிவரசியலைத் தவிர்த்து, அவசியமாகவும் அவசரமாகவும் மேற்கொள்ள வேண்டிய இன்றைய மிகப்பெரும் அரசியல் பணியாகும்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply