இடம்பெயர்ந்தோருக்கு உதவ விரும்பும் நாடுகள் ஐ. நா. வினூடாக வழங்க முன்வரவேண்டும்: ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன்

இடம்பெயர்ந்தவர்களுக்கு உதவ விரும்பும் உதவி வழங்கும் நாடுகள் ஐ.நாவின் சி. எச். ஏ. பி. எனும் அமைப்பினுடாக அத்தியாவசியப் பொருட்கள், கூடாரங்கள் என்பவற்றை வழங்க முன்வரவேண்டுமென ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ. நா. செயலாளர் நாயகத்தின் இலங்கை விஜயம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கத்தினால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு நல்குவது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கலந்துரையாடினர்.

மோதல் காரணமாக உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளோர் பற்றி விவரிக்கையில், வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருப்போருக்கு ஐ. நா. தொடர்ந்தும் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுக்கும். தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தமது சேவைகளை வழங்க அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதியளிக்கும். இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு மீளவும் இயல்பு வாழ்க்கையை பெற்றுக் கொடுப்பதற்கான அடிப்படைத் தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வாழ்வாதார தொழில்களைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது.

நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்போரை கட்டம் கட்டமாக மீளக் குடியமர்த்தி அரசாங்கம் முன்வைக்கவுள்ள செயற்திட்டங்களை செவிமடுத்த செயலாளர் நாயகம் அதனை வரவேற்றார்.மீளக் குடியமர்த்தும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கென கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்காக அரசாங்கம் சர்வதேச சமூகத்தினரின் ஒத்துழைப்பை கோரியுள்ளது.

மோதல்களுக்குப் பின்னரான நிலைமையை ஆராய்ந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் செயலாளர் நாயகமும் பெரும் எண்ணிக்கையான சிறுவர்கள் புலிகள் இயக்கத்தில் பலாத்காரமாக இணைத்துக் கொள்ளப்பட்டமை குறித்து கூடுதல் கவனம் செலுத்தினர்.சிறுவர்களை படையில் சேர்த்துக்கொள்வது தொடர்பான தமது முழுமையான அதிருப்தியை ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.

மோதல்களின் போது படையினரிடம் சரணடைந்த அல்லது விடுவிக்கப்பட்ட மேற்படி சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வு மற்றும் பாதுகாப்பு நிலையங்களில் யுனிசெப்பின் சிறுவர் – நட்பு செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி செயலாளர் நாயகத்திடம் கூறினார்.

படையில் சேர்த்துக்கொள்ளப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை மீண்டும் சமூகத்தின் சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதே இவற்றின் பிரதான நோக்கமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுனிசெப்புடன் இணைந்து அரசாங்கம் முன்னெடுத்து வரும் செயற் திட்டங்களை செயலாளர் நாயகம் வரவேற்ற அதேவேளை, வடக்கில் புலிகளின் படையில் சேர்த்துக் கொள்ளப்பட்ட சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும் வகையிலான இதுபோன்ற பல கொள்கைகளையும் திட்டங்களையும் அரசாங்கம் தொடர்ந்தும் அமுல்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

சரணடைந்த புலிகளுக்கு வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வு, முன்னெடுப்புக்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்குத் தெரிவித்தார்.புனர்வாழ்வுக்கான ஆணையாளர் நாயகத்தினால் எடுக்கப்பட்டு வரும் வேலைத் திட்டங்களுக்கு மேலதிகமாக முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை சாதாரண வாழ்க்கையினுள் கொண்டுவருவதற்கான தேசிய செயற்திட்டம் ஐ. நா. மற்றும், சர்வதேச அமைப்புக்களின் உதவியுடன் முன்னெடுக்கப்படுகின்றதெனவும் ஜனாதிபதி கூறினார்.

சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் இலங்கை திடசங்கற்பம் பூண்டுள்ளது. மனித உரிமைகளை சர்வதேசத்திற்கேற்ப செயற்படுத்துவதன் அவசியத்தை ஐ. நா. செயலர் வலியுறுத்திக் கூறினார். இதற்கான நடவடிக்கைகளை இலங்கை எடுக்கும். இவ்வாறு கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply