ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் : மாநில கட்சி கூட்டங்களில் தீர்மானம்
பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்துள்ளார். இது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் உள்ள 48 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராகுல் அறிவிப்பையொட்டி மராட்டிய மாநில காங்கிரஸ் கட்சி கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது.
மாநில தலைவர் அசோக் சவான், மும்பை நகர தலைவர் மிலிந்த் தியோரா ஆகியோர் முன்மொழிந்து நிறைவேற்றிய தீர்மானத்தில் கூறியிருப்பதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது. ராகுல் காந்தி நாடு முழுவதும் அயராமல் பிரசாரத்தில் ஈடுபட்டார். உண்மையில் தேர்தல் தோல்விக்கு மாநில தலைவர்களே பொறுப்பேற்க வேண்டும்.
காங்கிரசுக்கு வாக்களித்த கோடிக்கணக்கான வாக்காளர்கள் ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். ராகுல் காந்தியின் ராஜினாமா முடிவால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இப்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு ராகுல் காந்தியின் தலைமையும், வழிகாட்டலும் தேவை. எனவே ராகுல் காந்தி தலைவராக தொடர வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானிக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியின் தலைமை மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் அவர் தலைவர் பதவியில் தொடர வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply