இன்று ஜெனீவாவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசேட அமர்வு

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் விசேட அமர்வில் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் இன்று  கலந்துகொள்கின்றனர்.ஜெனீவாவில் நடைபெறும் இவ்விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க மற்றும் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் ஆகியோர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஜெனீவா புறப்பட்டுச் சென்றனர். ஜெனீவாவுக்கான இலங்கைத் தூதுவர் கலாநிதி தயான் ஜயதிலக்கவும் இந்த அமர்வில் கலந்துகொள்ளவிருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் உறுப்புரிமை நாடுகளுக்கு விளக்கமளிப்பதற்கு சிறந்ததொரு சந்தர்ப்பமாக இவ்வமர்வு அமைந்திருப்பதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐ. நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் 48 உறுப்புரிமை நாடுகளுள் விசேட அமர்வொன்றைக் கூட்டுவதற்கு மூன்றில் ஒன்று அதாவது ஆகக் குறைந்தது 16 நாடுகளின் கையொப்பங்கள் தேவை. கனடா, ஜேர்மனி, இத்தாலி, ஆர்ஜன்டீனா, பொஸ்னியா, சிலி, பிரான்ஸ், நெதர்லாந்து, மெக்சிகோ, மொரீஷியஸ், சுவிற்சர்லாந்து, உருகுவே உள்ளிட்ட 17 நாடுகள் கேட்டுக்கொண்டதற்கமைய ஜெனீவாவில் இன்று  இலங்கை விவகாரம் தொடர்பிலான விசேட அமர்வு நடத்தப்படுகிறது.

இந்த அமர்வில் பங்குபற்ற எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பை நாம் சாதகமாக பயன்படுத்துவோம். அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளுக்கும் விளக்கிக் கூறுவதன் மூலம் இடம்பெயர்ந்துள்ளோரை மீளக்குடியமர்த்துவதற்கும் மோதல் இடம்பெற்ற பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்கும் அந்நாடுகளின் உதவிகளை பெறுவோமென அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை தெரிவித்திருப்பதாகவும் அமைச்சின் பேச்சாளர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply