ராகுல்காந்தி மீண்டும் கட்சி பணிக்கு திரும்பினார்
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததையடுத்து அதுபற்றி ஆலோசனை நடத்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.ராகுல்காந்தி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிரடியாக அறிவித்தார். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோதே இடையில் வெளியேறிவிட்டார்.
ஒரு வாரமாக கட்சியில் எந்த பணிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. மூத்த தலைவர்களை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார். இடையில் ஜவகர்லால் நேரு நினைவு நாள் நிகழ்ச்சியில் மட்டும் பங்கேற்றார்.
இந்த நிலையில் நேற்று ராகுல்காந்தி முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் வீட்டுக்கு சென்று அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் வீட்டுக்கும் சென்ற அவர், அவருடன் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
தற்போது காங்கிரசுக்கு 52 எம்.பி.க்கள் உள்ளனர். பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற வேண்டும் என்றால் 55 எம்.பி.க்கள் தேவை. எனவே சரத்பவாரின் தேசியவாத காங்கிரசை (5 இடம்) காங்கிரசோடு இணைத்து விடலாம் என்ற திட்டம் உள்ளது. இதற்காக சரத்பவாரை சந்தித்து பேசி இருக்கலாம் என்று தெரிகிறது.
பின்னர் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, ராகுல்காந்தியை அவரது வீட்டில் சந்தித்து பேசினார்.
ஒருவாரமாக எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் மவுனமாக இருந்து வந்த ராகுல்காந்தி நேற்று ஒரே நாளில் மன்மோகன்சிங், சரத்பவார், குமாரசாமி ஆகியோரை சந்தித்து பேசி இருக்கிறார்.
இதன் மூலம் அவர் கட்சி பணிகளை மீண்டும் தொடங்கி இருக்கிறார். இதனால் அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு காங்கிரஸ் தலைவர் பதவியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்களின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. ராகுல்காந்தி பாராளுமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இது சம்பந்தமாக கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன கார்கே தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள்.
பாராளுமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து காங்கிரஸ் கட்சியில் பல மாற்றங்களை கொண்டுவர ராகுல்காந்தி திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மாநில அளவில் பல தலைவர்கள் மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் இந்த மாற்றங்கள் இருக்கும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதற்கு வசதியாக பல மாநிலங்களின் தலைவர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை கட்சி தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply