தமிழகத்தில் அகதி முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு விடிவு கிட்டி விட்டது : எஸ். சி. சந்திரஹாசன்

தமிழகத்தில் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக கடந்த 25 வருடங்களாக இலங்கை அகதிகளைப் புனரமைக்கும் அமைப்பின் தலைவராக செயற்பட்டு வரும் `தந்தை` செல்வாவின் மகன் எஸ். சி. சந்திரஹாசன் தெரிவித்துள்ளார். தற்போது, தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளின் நிலைப்பாடு தொடர்பாக இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியொன்றின் போதே அவர் இவ்வாறு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில் நீண்டகாலமாக அகதிகளாக இருக்கும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு விடிவொன்று எட்டும் என்ற நம்பிக்கையினை அவர் வெளியிட்டுள்ளார்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தை அடுத்த தமிழகம் சென்ற அவர் யுத்தத்தால் தமிழ் நாட்டுக்கு வந்த இலங்கை தமிழ் அகதிகளின் நலன்களைப் பேணும் முகமாக `இலங்கை அகதிகள் புனரமைப்பு` அமைப்பை நிறுவி நிர்வகித்து வருகின்றார்.

இலங்கை தமிழ் மக்களுக்கு சம உரிமைகளை வழங்குவதன் மூலம், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவர்களின் சேவைகளையும் பெறமுடியும் எனக் குறிப்பிட்டதுடன் இதன்மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை சிறந்த முறையில் மேம்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாத முடிவில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி தமிழ் நாட்டில் உள்ள 25 மாவட்டங்களில் 73 ஆயிரத்து 378 இலங்கை அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தற்சமயம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஜனநாயக நீரோட்டத்தில் இணைய சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் எனவும் அந்தச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி அண்மையில் தேசிய தொலைக்காட்சியில் ஆற்றிய உரையை தாம் வரவேற்பதாகத் தெரிவித்த சந்திரஹாசன் அதற்கிணங்க தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வுடனான அமைதி கிட்டும் எனவும் இந்திய ஊடகத்திற்கு வழங்கிய மேற்படி பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply