டிரம்ப் ஒரு சர்ச்சைக்குரிய அதிபர்: பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் விமர்சனம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மூன்று நாள் பயணமாக பிரிட்டன் சென்றுள்ளார். இன்று செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் பிரிட்டன் பிரதமர் தெரசா மே தலைமையில் நடைபெற்ற வணிக மாநாட்டில் கலந்து கொண்டார்.

இந்நிலையில், பிரிட்டன் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெர்மி ஹன்ட், அமெரிக்க பத்திரிகைக்கு அளித்த பேட்டியின்போது, அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு சர்ச்சைக்குரிய அதிபர் என விமர்சித்தார். சர்ச்சைக்குரிய அதிபர் எனக் கூறிய மறுகணமே டிரம்ப் பிரிட்டனின் மிகச்சிறந்த நண்பர் எனவும் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “டிரம்ப் சர்ச்சைக்குரியவராக இருந்தாலும் பிரிட்டனின் நல்ல நண்பர் ஆவார். அவர் பிரெக்சிட் விவகாரங்களில் எங்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். மேலும் அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்துவதற்கான சந்திப்பு இதுவாகும். அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் வரலாற்றில் அமெரிக்கா-இங்கிலாந்து கூட்டணி முக்கியமான ஒன்றாகும்.

டிரம்பின் அனைத்து முடிவுகளுக்கும் உடன்படுவோம் என கூறவில்லை. சமீப நிகழ்வுகளான காலநிலை மாற்றம், ஈரான் விவகாரம் போன்றவற்றில் உடன்பாடு இல்லைதான் என்றாலும் அது எவ்விதத்திலும் இந்த உறவை பாதிக்காது” என்றார்.

இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கா- பிரிட்டன் இடையே ஏற்பட்ட உறவு உலக சமாதானத்திற்காகவும், செழுமைக்கும் வழிவகுத்தது. மேலும் டிரம்ப் அதற்கு உறுதுணையாக உள்ளார் எனவும் ஜெர்மி ஹன்ட் தெரிவித்தார்.

அதேநேரத்தில் டிரம்ப் வருகைக்கு எதிராக பிரிட்டனில் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply