இலங்கைக்கு எதிரான இஸ்ரேலின் யோசனை தோற்கடிப்பு

உலக சுகாதார ஸ்தாபன அமர்வில் இலங்கைக்கு எதிராக இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை 193 நாடுகளின் ஒத்துழைப்புடன் தோற்கடிக்கப்பட்டதாக சுகாதார போஷாக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் 62 ஆவது அமர்வில் இலங்கை சார்பாக சுகாதார அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கலந்துகொண்டார்.

நேற்று முன்தினம் (மே 24) மாலை நாடு திரும்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இந்த அமர்வில் உலக சுகாதார ஸ்தாபன தலைவராக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவு செய்யப்பட்டார்.

மனிதாபிமான உரிமைகளை மீறும் நாடாகக் கருதி இலங்கைக்கு எதிராக விசாரணை நடத்துவதற்காக உலக சுகாதார ஸ்தாபன விசாரணைக் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்ப வேண்டுமென இந்த அமர்வின் போது இஸ்ரேல் யோசனையொன்றை முன்வைத்தது. ஆனால், சக நாடுகளின் உதவியுடன் இந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார். உலக சுகாதார ஸ்தாபன தலைவர் பதவி எனக்குக் கிடைத்தது இலங்கைக்கு கிடைத்த கெளரவமாகும்.

இதற்கு முன் இலங்கையர் எவரும் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது கிடையாது. உலக சுகாதார ஸ்தாபன தலைவர் பதவிக்கு எனது பெயர் சிபார்சு செய்யப்பட்டுள்ளதை அறிந்தது முதல் ஜெனீவா உலக சுகாதார ஸ்தாபனத்திற்கு முன்பாகவும் ஐ. நா. முன்பாகவும் பெருமளவு புலி ஆதரவாளர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல நாடுகள் இலங்கைக்கு இந்தப் பதவி கிடைப்பதை தடுக்க முயன்றன. இறுதியில் அந்த நாடுகளுக்கும் எமக்கு ஆதரவு வழங்க நேரிட்டது என்றும் அவர் சொன்னார். புலிகளை இராணுவ ரீதியாக தோற்கடித்தது போல புலிகளின் கருத்துக்களை உலக சுகாதார ஸ்தாபனத்தினுள்ளும் தோற்கடிக்க முடிந்தது.

காஸாவிலுள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள் அளிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது இலங்கை பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளது.

கடந்த காலங்களில் காஸாவுக்கு உலக சுகாதார ஸ்தாபன அதிகாரிகள் அனுப்பப்பட்டது போல இலங்கைக்கும் அனுப்ப இஸ்ரேல் முயன்றது. இலங்கை மனித உரிமைகளை மீறும் நாடு என்ற கருத்தை பரப்ப அந்த நாடு முயன்றது என்றும் அவர் கூறினார்.

ஆனால் சகல நட்பு நாடுகளுக்கும் நான் இலங்கை தொடர்பான உண்மை நிலைவரத்தை விளக்கினேன். ஐ. நா. செயலாளர் நாயகம் இலங்கை வருவதற்கு முன்னதாக நான் அவருடன் அரை மணி நேரம் பேச்சு நடத்தினேன். அவருக்கும் இலங்கையின் உண்மை நிலைமைகளை எடுத்துக் கூறினேன்.

இஸ்ரேல் கொண்டுவந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது சர்வதேச ரீதியில் எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இலங்கையின் உண்மை நிலைவரம் குறித்து தொடர்ந்து வெளிநாடுகளையும் வெளிநாட்டு தூதுவர்களையும் அறிவூட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply