தமிழ் – சிங்கள உறவை கட்டியெழுப்புவது அடுத்த கட்ட பணியாக இருக்க வேண்டும்

யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, தமிழ் – சிங்கள உறவைக் கட்டியெழுப்பும் பணிகளை முன்னெடுக்க வேண்டுமென்று, வன்னிக் களமுனையில் செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையைச் சேர்ந்த சமன் குமார ராமவிக்ரம தெரிவித்தார். இந்தப் பணியை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

வன்னியில் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது கடந்த ஒன்றரை வருட காலமாக, களமுனையில் நின்று ரூபவாஹினிக்காக செய்தி சேகரித்த சமன்குமார ராம விக்ரமவுக்கும், அமல் சமந்தவுக்கும் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.

ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் வளவில் திறந்த வெளிக் கலையகத்தில் நடைபெற்ற இந்தப் பாராட்டு விழாவில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஊழியர்கள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட உயரதிகாரிகள், ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், துணிச்சல் மிக்க இரண்டு செய்தியாளர்களுக்கும் விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

நேரடியாக ஒளிபரப்பாகிய இந்தப் பாராட்டு விழா நிகழ்வில் கருத்துத் தெரிவித்த இரண்டு செய்தியாளர்களும், களமுனையில் தாம் பெற்ற அனுபவங்களை வெளிப்படுத்தினர்.

“ஒரு நாள் முன்னேறிச் செல்லும் படையினருடன் சென்றபோது, புதுக்குடியிருப்பில் வைத்து தீவிர மோதல் நடந்தது. நான் செய்வதறியாது, என்னவானாலும் நடக்கட்டும் என்று கண்களை மூடிக் கொண்டேன். எந்தக் கஷ்டமானாலும், நாட்டு மக்களுக்கு போர்ச் செய்திகளைத் திரட்டி உடனுக்குடன் ஒளிபரப்ப வாய்ப்பு கிடைத்தமையைப் பெருமையாகக் கருதுகிறேன். இறுதி வரை, களத்தில் நின்று வெற்றி வாகை சூடியதன் பங்காளியாக ரூபவாஹினியும் இணைந்து கொண்டுள்ளதில் மகிழ்ச்சி. இனி, நாம் தமிழ் – சிங்கள உறவைக் கட்டியெழுப்ப வேண்டும். எமது அடுத்த கட்ட போராட்டம் அதுவாகத்தான் இருக்க வேண்டும்” என்றார் ராமவிக்ரம.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply