பயங்கரவாத மற்றும் அவசரகாலச் சட்டங்கள் நீக்கப்படவேண்டும்: ஐ.தே.க.
நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரெனக் கூறியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி, அவசரகாலச் சட்டமும், பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த இரண்டு சட்டங்களும் படிப்படியாகத் தளர்த்தப்பட வேண்டுமென அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் வெற்றிபெற்றிருக்கும் இலங்கை அரசாங்கம், அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனக் கிரியல்ல குறிப்பிட்டார். “இலங்கைக்கான அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கான சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், அவரின் தலைமையிலான அரசாங்கத்துக்கும் கிடைத்துள்ளது. இதனை அவர்கள் பயன்படுத்தவேண்டும். அவர்களுக்கு ஆதரவு வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாரகவே உள்ளது” என கிரியல்ல கூறினார்.
தென் ஆபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா பதவிக்கு வந்த பின்னர் வெள்ளையர்களை மன்னித்ததைப் போன்று ஜனாதிபதியும் மண்டேலாவைப் பின்பற்றிச் செயற்படவேண்டும் என அவர் கோரிக்கைவிடுத்தார்.
அத்துடன், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதற்கும் ஆதரவு வழங்கத் தாம் தயாரெனக் கிரியல்ல சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கைக்கு எதிராகவும், பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகவும் மோதல் குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவர சர்வதேசரீதியில் எடுக்கப்படும் நடவடிக்கைக்குத் தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறினார். பயங்கரவாதத்துக்கு எதிராக மோதல்களில் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்ஷ தலைமையிலான அரசாங்கம் வெற்றிபெற்றிருப்பதைப் பாராட்டிய ஜெயசேகர, விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்குக் கடந்த காலங்களில் பலர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.எனினும், விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்கள் முடிவடைந்துள்ளபோதும் பயங்கரவாதத் தடைச்சட்டமும், அவசரகாலச் சட்டமும் நீக்கப்படாது என சபை முதல்வர் அமைச்சர் நிமால் சிறிபால.டி.சில்வா கூறியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply