புலிகளின் புலனாய்வுத்துறையுடன் இணைந்து வேலை செய்தவர் கைது
கொழும்பில் பனாமா ரேடர்ஸ் எனும் இலத்திரனியல் வியாபாரநிலைய உரிமையாளரான பிரபா என்பவரைத் தாம் கைது செய்துள்ளதாக அரச புலனாய்வுத்துறையினர் State Intelligence Service’s (SIS) தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தையைச் சேர்ந்த இவர் அரச படை அதிகாரிகள் சிலருடனும் பாதுகாப்புத் தரப்பினர் சிலருடனும் தொடர்புகளை மேற்கொண்டு தகவல்களைப் பெற்று விடுதலைப் புலிகளுக்கு வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளதாகவும் அரச புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அது மட்டுமின்றி கொழும்பிலுள்ள ராஜதந்திரிகளுடன் தொடர்பைக் கொண்டுள்ள இவர் அவர்களைத் தவறாக வழிநடத்தும் விதத்தில் தகவல்களை வழங்கி வந்துள்ளதாகவும், அவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் இருந்து எழுந்த சந்தேகத்தைத் தொடர்ந்தே அவர் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பொட்டம்மான் கபிலம்மான், சார்ள்ஸ் மற்றும் ரட்ணம் மாஸ்டர் ஆகியோரிடமிருந்து உத்தரவுகளைப் பெற்று இவர் செயற்பட்டு வந்ததாகவும், புலிகள் கொழும்பில் மேற்கொண்ட தற்கொலைத் தாக்குதல்களுக்கு இவர் உதவி வந்ததோடு, கொழும்பில் புலிகள் மறைந்திருக்கவும், பணவுதவி உட்பட பல்வேறு உதவிகளைப் புரிந்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தனது வியாபார நிலையத்திற்கு வரும் படையதிகாரிகள் மற்றும் காவற்துறை அதிகாரிகளுக்கு பெருமளவு கழிவு விலை கொடுப்பதாகவும், அதனூடாக அவர்களுடைய நட்பைப் பெற்ற அவர் பின்னர் அவர்களுக்கு பெரிய ஹோட்டல்களில் விருந்துபசாரங்களை வைத்து அவர்களுக்கு நெருக்கமானவராக மாறி அவர்களிடமிருந்து தகவல்களைப் பெற்று வந்ததாகவும், சில வேளைகளில் இவ்வாறான விருந்துபசாரத்திற்கு ஒரு இரவுக்கு ஒரு இலட்சம் ரூபாவுக்கு மேல் இவர் செலவு செய்ததாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இவருடைய கவனிப்புக்கு ஆளான படையதிகாரிகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
போர் நிறுத்த காலத்தில் பலமுறை வன்னிக்குச் சென்று புலிகளின் தலைவர்கள் பலரைச் சந்தித்த இவர் அவர்களுடைய உலகு தழுவிய பிரச்சாரத்திற்காக வீடியோ கமெராக்களையும், வழங்கியுள்ளார்.
இதுதவிர புலி உறுப்பினர்கள் துணை இராணுவக் குழுக்களால் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக கொழும்பில் பல லொட்ஜ்களிலும் ஹோட்டல்களிலும் கலர் வீடியொ கமெராக்களைப் பூட்டிக் கொடுத்துள்ளார்.
வெள்ளவத்தைக் காவற்துறை உயர் மட்டத்துடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ள இவர் வெள்ளவத்தைச் சுற்றிவளைப்புக்களின் போது முன்னரே தகவல்களைப் பெற்று தனது ஆட்களைப் பாதுகாத்துக் கொள்வார்.
விடுதலைப் புலிகளின் நிதியுதவியுடன் வெள்ளவத்தை 37வது ஒழுங்கையில் சண்பிளவர் அபார்ட்மென்ட்ஸ் என்ற பெயரில் 7மாடிக்கட்டிடமொன்றைக் கட்டுவதற்கான காணியை வாங்குவதிலிருந்து கட்டிடம் கட்டுவது வரையான மேற்பார்வையை இவரே செய்து வந்துள்ளார்.
சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பலமுறை விஜயம் செய்துள்ள இவர் தனது விஜயத்தின் போது இருதடவை தாய்லாந்திலும் மலேசியாவிலும் புலிகளின் சர்வதேசப் பிரதிநிதியான பத்மநாதனைச் (கே.பி.) சந்தித்துள்ளார்.
இவ்வாறான சந்திப்பொன்றின் போது ஒருமுறை இவருடன் கூடவே கேர்ணல் ரஞ்சித் பெரேராவும் கூடச் சென்றிருக்கிறார்.
கேர்ணல் ரஞ்சித் பெரேரா 2006இலிருந்து 2008 வரை 52வது டிவிசனில் பணியாற்றியவர். யாழ்ப்பாணம் தனங்கிளப்பில் புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது தன்னுடைய மேலதிகாரிகளின் உத்தரவுக்கமைய எதிர்த்து தாக்காது தனது படையணிகளுடன் பின்வாங்கிக் கொண்டவர். இதன்காரணமாக பதவியுயர்வு மறுக்கப்பட்டவர். பிரபா இவருடைய உதவியினால் பெறப்பட்ட தகவல்களை புலிகளுக்கு வழங்கியதன் மூலம் பின்வரும் சம்பவங்கள் இடம் பெற்றன.
2007 பெப்14 அன்று பலாலியில் நடைபெற்ற படையினரின் நிகழ்ச்சி ஒன்றின் போது புலிகள் பூனகரியிலிருந்து மேற்கொண்ட தாக்குதலில் கேர்ணல் ரல்பா நுகர படுகாயமடைந்ததோடு, அந்நிகழ்வுக்குப் பாதுகாப்பு அமைச்சரையும் இராணுவத் தளபதியையும் ஏற்றிச் சென்ற விமானம் தரையிறங்காமலே கொழும்பு திரும்பியது. பாதுகாப்பு அமைச்சரின் இவ்விஜயம் மிக இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இத்தகவலை கேர்ணல் ரஞ்சித் பெரேரா பிரபா ஊடாகவே புலிகளுக்கு வழங்கியுள்ளார்.
மேஜர் ஜெனரல் சந்திரசிறி யாழ். நிலைமைகளைப் பார்வையிட்ட போதும் விடுதலைப் புலிகள் ஆட்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டனர். இந்தத் தகவலும் புலிகளுக்கு கேர்ணல் ரஞ்சித் மூலமாகவே வழங்கப்பட்டிருந்தது.
இது தவிர முகமாலையில் படையினர் மேற்கொள்ளும் முன்னர்வு முயற்சிகளின் போதும் புலிகள் இவரிடமிருந்து தகவல்களைப் பெற்று தம்மைத் தயார் படுத்திக் கொண்டுள்ளனர். இத்தகவல்கள் எல்லாம் பிரபா ஊடாகவே புலிகளுக்குச் சென்றுள்ளது எனவும் அரச புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply