நலன்புரி முகாம்களில் பிரிந்து வாழும் குடும்பங்களை இணைக்க நடவடிக்கை : அமைச்சர் ரிசாட் பதியூதீன்

யுத்தத்தினால் வன்னியிலிருந்து பல்வேறு கட்டங்களாக இடம்பெயர்ந்து வெவ்வேறு முகாம்களில் பிரிந்திருக்கும் குடும்பங்களை மீள இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

“மோதல்களின் போது அலையலையாக மக்கள் இடம்பெயர்ந்தனர். இதனால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பலர் குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு வெவ்வேறான முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு பிரிந்த குடும்பங்களை இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரே குடும்ப உறுப்பினர்கள் ஒரு முகாமுக்குள் தங்கவைக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தவுள்ளோம்” என அமைச்சர் கூறினார்.

உலகத்திலேயே கூடுதலான உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் மெனிக் பார்ம் முகாமுக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள நிலைமைகளை ஆராய்ந்த அமைச்சர் பதியூதீன், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்து இடம்பெயர்ந்தவர்களின் நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது குறித்துக் கலந்துரையாடியுள்ளார்.

“முகாம்களிலுள்ள வயதுமுதிர்ந்தவர்களை ஒரு வாரத்துக்குள் வெளியேற அனுமதி வழங்கியுள்ளோம். இதற்கு சமூக சேவைகள் அமைச்சிடமிருந்தும் உதவிகளைக் கோரியுள்ளோம். முகாம்களிலிருந்து வெளியேறும் முதியவர்கள் அவர்களுடைய உறவினர்களுடன் இணைகிறார்களா என்பதைப் பொலிஸார் கண்காணித்து உறுதிப்படுத்துவார்கள்” என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேநேரம், அரசாங்க வங்கிகளான இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன ஒவ்வொரு நலன்புரி நிலையங்களிலும் கிளைகளைத் திறக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இடம்பெயர்ந்து முகாம்களிலுள்ள இளைஞர்கள் மற்றும் சிறுவர்களுக்கான விiளாயட்டு உபகரணங்களை வழங்குமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகத் தெரிவித்தார்.

மெனிக் பார்ம் முகாம்களில் காணப்படும் இடநெருக்கடியைக் கருத்தில்கொண்டு அங்கு நான்காவது வலயமொன்று உருவாக்கப்பட்டுவருவதாகவும் அமைச்சர் கூறினார்.

அத்துடன், நலன்புரி நிலையங்களில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு வலயத்திலிருந்து இடம்பெயர்ந்த கிராம உத்தியோகத்தர்களை நலன்புரி நிலையங்களுக்குள் மீண்டும் பணிக்கு அமர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. முகாம்களிலுள்ள மக்களின் பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதவிவுகளை மேற்கொள்வதற்கு கிராம உத்தியோகத்தர்கள் உதவுவார்கள் எனக் கூறப்படுகிறது.

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 300,000 பேர் 41 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply