யுத்த முனையில் பணி புரிந்த 13 இராணுவ தளபதிகளுக்கு பாராட்டு பத்திரம் வழங்கி கெளரவம்

பயங்கரவாதத்தை முற்றாக ஒழிப்பதற்கு அர்ப்பணிப்போடு செயற்பட்ட இராணுவத்தினரைக் கெளரவிக்கும் வெற்றி அணிவகுப்பு நேற்றுக் காலை கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில் இடம் பெற்றது.இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தின் போது வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான இராணுவ நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த 13 முன்னணி தளபதிகள் கெளரவிக்கப்பட்டனர்.

இராணுவத் தலைமையகத்திலுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த வெற்றிக் கொண்டாட்டத்தில் இராணுவத்தின் சகல படைப் பிரிவுகளையும், படையணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அணிவகுப்பு இடம்பெற்றது.

இராணுவத்தின் 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்னவின் தலைமையில் 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வாவின் பங்குபற்றலுடன் நடைபெற்ற இந்த மரியாதை அணி வகுப்பில் 50 அதிகாரிகள், 1201 இராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர்.

இராணுவ வாத்தியக் குழுவின் இசையுடன், இராணுவத்தின் மோட்டார் வாகன பவனிக்கு மத்தியில் வருகை தந்த இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவையும், அவரது பாரியார் திருமதி அனோமா பொன்சேகா ஆகியோரை இராணுவத்தின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி வரவேற்றார்.

பிரதான மேடைக்கு அழைத்து வரப்பட்ட இராணுவத் தளபதி அங்கு வழங்கப்பட்ட மரியாதையை ஏற்றுக் கொண்டதுடன் சகல படைப் பிரிவினர்களினதும் மரியாதை அணி வகுப்பை பார்வையிட்டார்.

இந்த நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம் பெற்று வந்த பயங்கரவாத நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடக்கு, கிழக்கில் களமுனைகளில் இருந்து மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு தலைமை வகித்த தளபதிகளின் சேவையை பாராட்டும் வகையில் இராணுவத் தளபதி தனது உத்தியோகபூர்வ பாராட்டுக் கடிதங்களை இராணுவ சம்பிரதாயத்திற்கமைய 12 தளபதிகளிடமும் கையளித்தார்.

அங்கு கூடியிருந்த இராணுவத்தின் உயர் அதிகாரிகள், குடும்ப உறவினர்கள் மற்றும் பெருந் தொகையான ஊடகவியலாளர்களின் கரகோஷத்திற்கு மத்தியில் இந்த பாராட்டுக் கடிதங்கள் கையளிக்கப்பட்டன.

யாழ். பாதுகாப்பு படைப் பிரிவின் முன்னாள் கட்டளைத் தளபதியும், இராணுவத்தின் தற்போதைய பிரதான பாதுகாப்பு அதிகாரியுமான மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி, யாழ். பாதுகாப்பு படைப் பிரிவின் தற்போதைய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மெந்தக சமரசிங்க ஆகியோர் முதலாவதாக கெளரவிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படைப் பிரிவுகளின் கட்டளைத் தளபதிகளும் கெளரவிக்கப்பட்டனர்.

இராணுவத்தின் 57 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் டயஸ், 59 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்தை, 53 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரட்ன, 55 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் பிரசன்ன சில்வா, 3 வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சத்தியப் பிரிய லியனகே, 58 வது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சவேந்திர சில்வா, பிரிகேடியர் சாகி கால்லகே, 2 வது அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரோஹன பண்டார, 4 வது அதிரடிப் படைப் பிரிவின் கட்டளைத் தளபதி கேர்ணல் நிஷாந்த வன்னியாராச்சி, கேர்ணல் ரவிப்பிரிய ஆகியோர் கெளரவிக்கப்பட்டதுடன் தளபதியினால் பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன.

இந்தப் பாராட்டைத் தொடர்ந்து இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா விசேட உரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு படைப் பிரிவுகளின் தளபதிகளுக்கு ஒருவர் பின் ஒருவராக சென்று தமது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இதில் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply