புலிகளிடம் பணம் பெற்றுள்ள ‘ஊடகவியலாளர்கள்`

கொழும்பிலுள்ள சில சிங்கள ஊடகவியலாளர்கள் புலிகளிடமிருந்து கிடைத்த பணம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியுதவி என்பவற்றுக்காக செய்திகளைப் பிழையாக வழங்கியிருப்பதுடன், இலங்கை அரசுக்கு எதிரான தகவல்களை வெளியிட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்திருப்பதாகப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த விக்ரமரட்ண கூறினார்.

“தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படுவதால் விபரங்களை வெளியிடமுடியாது. எனினும், புலிகளுடன் தொடர்புடைய ஊடகவியலாளர்கள் பற்றிய மேலதிக தகவல்கள் கிடைக்கும். விடுதலைப் புலிகளிடமிருந்து கிடைத்த பணம் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களுக்கான நிதியுதவி என்பவற்றுக்காக செய்திகளைப் பிழையாக வழங்கியிருப்பதுடன், இலங்கைக்கு எதிரான தகவல்களை வெளியிட்டுள்ளனர்” என அரசாங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் தெரிவித்தார்.

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளர் தயா மாஸ்டரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, புலிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு செயற்பட்ட சிங்கள ஊடகவியலாளர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்ததுடன், சாட்சியங்களும் கிடைத்ததாகப் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

இவர்களில் பலர் சர்வதேச அமைப்புக்களுடன் தொடர்புவைத்திருப்பதுடன், இவர்கள் ஊடக சுதந்திரம், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் போன்றவற்றுக்காகக் குரல்கொடுத்துவந்தனர் என்றும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

“இவ்வாறு செயற்பட்டுவந்த ஊடகவியலாளர்கள் சிலர் தமது உயிர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நாட்டைவிட்டுவெளியேறியுள்ளனர். ஆனால், குற்றம் செய்துவிட்டோம் என்பதற்காகவே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். விடுதலைப் புலிகள் மோதலில் தோல்வியடைந்துவிட்டனர் என்ற காரணத்துக்காகவே அவர்கள் நாட்டைவிட்டு ஓடிவிட்டனர்” என அவர் கூறினார்.

பாதுகாப்பு வலயத்திலிருந்து பொதுமக்கள் வெளியேறியபோது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியபோது அதனைக் கூறாமல் இராணுவத்தினர் ஷெல் தாக்குதல் நடத்தியதாகச் செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் பொலிஸ்மா அதிபர் தனது செவ்வியில் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply