ருமேனியாவில் பெண் மந்திரி நீக்கம் : பிரதமர் அதிரடி நடவடிக்கை
ஐரோப்பிய நாடான ருமேனியாவில், கராக்கல் நகரைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா மாசேசானு என்ற 15 வயது சிறுமி ‘ஹிட்சைக்கிங்’ பயணம் (கட்டை விரலை உயர்த்திக்காட்டி அடையாளம் தெரியாத அன்னியர்களின் வாகனங்களை நிறுத்தி, அதில் இலவச சவாரி செய்வது) மேற்கொண்டார்.
அப்போது அவர் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை, தலைநகர் புகாரெஸ்ட் அருகே நடந்திருப்பது அந்த நாட்டையே உலுக்கி உள்ளது.
அந்த சிறுமி கடத்தி அடைக்கப்பட்டிருந்தபோது 3 முறை போலீசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி கேட்டிருக்கிறார். ஆனால் 19 மணி நேரம் கழித்துத்தான் போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். அதற்குள் அந்த சிறுமி கொலை செய்யப்பட்டு விட்டார்.
இது தொடர்பான ஆதார ஆவணங்களை அந்த சிறுமியின் சித்தப்பா அலெக்சாண்ட்ரு கும்பனசு வெளியிட்டு உள்ளார்.
அந்த சிறுமி, போலீசிடம் ஒரு முறை போனில் பேசியபோது, ‘‘தயவு செய்து லைனில் இருங்கள். எனக்கு உண்மையிலேயே பயமாக இருக்கிறது’’ என கூறி உள்ளார்.
ஆபத்தில் இருந்தபோது அந்த சிறுமி உதவி கேட்டும் சரியான நேரத்தில் உரிய உதவி கிடைக்காததால் அநியாயமாக கொல்லப்பட்டு விட்டார் என்பது பெருத்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் முதலில் போலீஸ் துறை தலைவர் இயோவான் புடா நீக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து அந்த நாட்டின் உள்துறை மந்திரி நிக்கோலா மோகா பதவி விலகினார்.
இந்த நிலையில் அந்த நாட்டின் கல்வித்துறை மந்திரியாக உள்ள எகடெரினா ஆண்ட்ரோனஸ்கு என்ற பெண் தலைவர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சிறுமி அலெக்சாண்ட்ரா மாசேசானு விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டார். அதில் அவர், ‘‘அடையாளம் தெரியாதவர்களின் கார்களில் ஏறக்கூடாது என்று அலெக்சாண்ட்ராவுக்கு கற்றுத்தரப்படவில்லை’’ என கூறினார்.
இது பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது.
இதனால் மந்திரி எகடெனா ஆண்ட்ரோனஸ்குவை பிரதமர் வியோரிகா டான்சிலா அதிரடியாக நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் ‘பேஸ்புக்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘எகடெரினா வெளியிட்ட கருத்து கொஞ்சம்கூட பொறுப்பு இல்லாதது. அதனால்தான் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்’’ என கூறி உள்ளார்.
ஆனால், கடத்தி கொலை செய்யப்பட்ட சிறுமி அலெக்சாண்ட்ரா மாசேசானுவையோ, அவரது பெற்றோரை தான் குற்றம் சாட்டவில்லை என்று எகடெரினா கூறி உள்ளார். இதற்கிடையே, சிறுமி அலெக்சாண்ட்ரா மாசேசானு கடத்தி கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளி கேயார்கி கைது செய்யப்பட்டு விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply