அரசமைப்புச் சட்டம் 370 பிரிவு; ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: அமெரிக்கா கருத்து
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டம் 370 பிரிவு நீக்கப்பட்ட விவகாரத்திலும், காஷ்மீரில் நிலவும் சூழல்களையும், சம்பவங்களையும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
அரசமைப்புச்சட்டம் 370 பிரிவில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குத் தற்காலிகமாக வழங்கப்பட்டு இருந்த சிறப்பு உரிமைகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்தது. அதற்கான தீர்மானத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களவையில் கொண்டு வந்து நீண்ட விவாதத்துக்குப் பின் நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீர்மானத்தின்படி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாக லடாக்கும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசமாக ஜம்மு காஷ்மீரும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு உரிமைகள் வழங்கும் 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்தும், இரு மாநிலங்களாக பிரிக்கப்பட உள்ளது குறித்தும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் அதன்பின் பிரதிநிதி, பி5 நாடுகள் எனச் சொல்லப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பிரான்ஸ், ரஷியா ஆகிய நாடுகளின் தூதர்களிடம் நேற்று விளக்கம் அளித்தார்.
ஆனால், இந்தியாவின் இந்த நடவடிக்கையை சட்டவிரோதம், ஏற்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்திருந்தது.
அதன்பின் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மோர்கன் ஓர்டாகஸ் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில் அளிக்கையில், “எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் அனைத்துத் தரப்பினரும் அமைதியுடனும் கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் (பாகிஸ்தான், இந்தியா பெயரைக் குறிப்பிடாமல் தெரிவித்தார்). ஜம்மு காஷ்மீரில் நடக்கும் அனைத்து நிகழ்வுகள், விஷயங்களை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக கவனித்து வருகிறோம்.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த அரசமைப்புச் சட்ட அந்தஸ்தை இந்தியா திரும்பப் பெற்றது தொடர்பாகவும், இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது குறித்தும் நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம்.
ஜம்மு காஷ்மீரில் நடக்கும் அனைத்து சம்பவங்களும் உள்நாட்டு விஷயங்கள் என இந்தியா தெரிவித்துள்ளது. ஆனால், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல் குறித்துக் கவலை தெரிவித்துள்ளோம். ஏராளமானோர் ஜம்மு காஷ்மீரில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது கவலையளிக்கிறது. தனிப்பட்ட மனிதர்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், அவர்களுடன் கலந்துபேசி முடிவு எடுக்கவேண்டும் என்று கேட்டுள்ளோம் ” எனத் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply