வேலூரில் அதிமுக-திமுக ஓட்டுகளை பதம் பார்த்த சீமான்

பாராளுமன்றத்துக்கு கடந்த ஏப்ரல் மாதம் 18-ந்தேதி தேர்தல் நடந்த போது 39 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது. சீமான் மிக துணிச்சலாக புதுமுகங்களை களத்தில் இறக்கினார். கடந்த மே மாதம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது சீமான் நிறுத்திய வேட்பாளர்கள் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கணிசமான வாக்குகளை பெற்று இருந்தனர்.

பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டபோது நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தீபலட்சுமியை சீமான் அறிவித்தார். கமல்ஹாசன், டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய கட்சிகள் அனைத்தும் ஒதுங்கிக் கொண்ட நிலையில் சீமான் மட்டும் தன்னம்பிக்கையுடன் தீபலட்சுமியை களம் இறக்கினார்.

தீபலட்சுமியை ஆதரித்து அவர் வேலூர் பாராளுமன்ற தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார். தி.மு.க. – அ.தி.மு.க.வின் பிரமாண்ட பிரசாரத்திற்கு மத்தியில் அவரது பிரசாரம் எடுபடாமல் இருந்தது. ஆனால் தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை காட்டுவதாக அமைந்துள்ளது.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,995 வாக்குகளை பெற்றுள்ளார். அவரது இந்த வாக்குகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் தீபலட்சுமி பிரித்த வாக்குகள் அதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.

தீபலட்சுமிக்கு கிடைத்த வாக்குகள் அ.தி.மு.க.வை மட்டுமே பதம் பார்க்கவில்லை. தி.மு.க.வையும் சேர்த்து பதம் பார்த்து விட்டதாக அரசியல் நிபுணர்கள் கருதுகிறார்கள்.

தி.மு.க.வின் வாக்கு வித்தியாசத்தை விட 3 மடங்கு அதிகமாக தீபலட்சுமி வாக்குகள் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் உணர்ச்சி பொங்க வைக்கும் பேச்சுகள் வழக்கமாக வாக்காளர்கள் மத்தியில் பேசப்படும். தமிழர், தமிழ்நாடு, தமிழ் மொழி குறித்து அவரது தட்டி எழுப்பும் பேச்சுகள் நகர பகுதி மக்களை மட்டுமின்றி கிராமப் பகுதி மக்களையும் சென்று சேர்ந்துள்ளது.

குறிப்பாக இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் சீமானின் பிரசாரமும், பேச்சும் எடுபட்டுள்ளது. இதனால்தான் நாம் தமிழர் கட்சிக்கு சுமார் 27 ஆயிரம் பேர் வாக்களித்துள்ளனர்.

சீமானுக்கு என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வாக்கு வங்கி உருவாகி வருவதை இது காட்டுவதாக அரசியல் நிபுணர் காசிநாதன் கூறியுள்ளார். இந்த வாக்கு வங்கி, தேர்தலுக்கு தேர்தல் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறி உள்ளார்.

வேலூர் தேர்தலில் தீபலட்சுமி பெற்ற 27 ஆயிரம் வாக்குகளும் அதையே உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. பாலாற்றகங்கரையில் அமைந்துள்ள அம்பலூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த தீபலட்சுமி வேலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே கிராமம் கிராமமாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது அவர் தமிழ் தேசியம் பற்றி மக்கள் மத்தியில் முழங்கியது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதுபற்றி அவர் கூறுகையில், “வேலூர் தொகுதியில் வாக்களித்த மக்களின் 9,417 பேர் நோட்டாவுக்கு வாக்களித்து உள்ளனர். அந்த 9,417 பேருக்கும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை கோட்பாடுகள் பற்றி முழுமையாக தெரிந்து இருந்தால் அவர்கள் தடம் மாறி சென்று இருக்க மாட்டார்கள். எனக்கு வாக்களித்து இருப்பார்கள்” என்றார்.

தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரம் நாம் தமிழர் கட்சியினர் வேலூருக்கு வந்து தீபலட்சுமிக்கு ஆதரவாக தீவிரமாக பிரசாரம் செய்தனர். அது இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியது.

சீமான் 10 கூட்டங்களில் பேசினார். அந்த 10 கூட்டங்களிலும் அவர் இலவச கல்வி, இலவச மருத்துவம், சுத்தமான குடிநீர் ஆகிய மூன்றையும் வலியுறுத்தி பேசினார். இதுவும் இளைஞர்களை கவர்ந்தது. இதனால்தான் தீபலட்சுமிக்கு 27 ஆயிரம் வாக்குகளை மக்கள் வழங்கி உள்ளனர்.

வேலூர் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க. இரு தரப்பிலும் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக புகார்கள் எழுந்தன. ஆனால் நாம் தமிழர் கட்சியினர் ஒரு இடத்தில் கூட எந்த வாக்காளருக்கும் லஞ்சமாக பணம் கொடுக்கவில்லை.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது இல்லை என்பதை நாம் தமிழர் கட்சியினர் கொள்கையாக வைத்துள்ளனர். அவர்களது நேர்மைக்கு வேலூரில் 27 ஆயிரம் வாக்குகள் கிடைத்து உள்ளது.

இந்த 27 ஆயிரம் வாக்குகளும் அ.தி.மு.க, தி.மு.க.விடம் இருந்து பிரிக்கப்பட்ட வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலூர் தொகுதியில் மட்டுமின்றி மற்ற 37 (நீலகிரியில் போட்டியிடவில்லை) பாராளுமன்ற தொகுதிகளிலும் ஏற்கனவே நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பிரித்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலான தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை வாங்கி பிரமிக்க வைத்தனர்.

திருவள்ளூர் தொகுதியில் வெற்றிசெல்வி 57,840 வாக்குகள், வடசென்னையில் காளியம்மாள் 60,454 வாக்குகள், தென்சென்னையில் செரீன் 50,222 வாக்குகள், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மகேந்திரன் 53,027 வாக்குகள், காஞ்சிபுரம் தொகுதியில் சிவரஞ்சனி 62,721 வாக்குகள், கோவையில் கல்யாணசுந்தரம் 60,400 வாக்குகள், திண்டுக்கல்லில் மன்சூர்அலிகான் 54,851 வாக்குகள், திருச்சியில் வினோத் 65,286 வாக்குகள்.

பெரம்பலூரில் சாந்தி 53,545 வாக்குகள், நாகப்பட்டினத்தில் மாலதி 50,091 வாக்குகள், தஞ்சையில் கிருஷ்ணகுமார் 56,707 வாக்குகள், சிவகங்கையில் சக்திபிரியா 69,176 வாக்குகள், விருதுநகரில் அருள்மொழி தேவன் 52,591 வாக்குகள், தென்காசியில் மதிவாணன் 58,855 வாக்குகள் பெற்று பிரமிக்க வைத்து இருந்தனர்.

இப்படி நாம் தமிழர் கட்சியினர் பிரித்த வாக்குகள் அனைத்துமே தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டு கட்சிகளையும் பதம் பார்த்தன.

டி.டி.வி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி பிரித்ததை விட சீமானின் நாம் தமிழர் கட்சி பிரித்த வாக்குகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply