பணம் இல்லையா போயிட்டே இரு… செல்பி எடுக்க வந்தவரை திருப்பியனுப்பிய வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கட்சியினர் இனியாரும் சால்வை அணிவிக்கக் கூடாது. சால்வை அணிவிக்க விரும்புவோர் அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்கலாம். வைகோவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்புவோர் குறைந்தபட்ச நிதியாக ரூ.100 வழங்க வேண்டும் என கடந்த 9-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வைகோ கார் மூலம் வேலூர் வழியாக சென்றார்.

ஆம்பூரில் அவருக்கு கட்சியினர் வரவேற்பு அளிக்க காத்திருந்தனர். வைகோவின் கார் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே வந்த போது பட்டாசு வெடித்து கட்சியினர் வரவேற்பு அளித்தனர். பின்னர், காரை விட்டு வைகோ கீழே இறங்கியதும் கட்சியினர் ஒவ்வொருவரும் அவரிடம் ரூ.100 வழங்கி செல்பி எடுத்துக்கொண்டனர்.

அப்போது, பஸ் நிலையம் அருகே நின்றிருந்த ஒருவர் ஓடி வந்து வைகோவுடன் போட்டோ எடுக்க தயாரானார்.

அவர் கட்சிக்காரர் என எண்ணிய வைகோ அவரிடம் பணம் கேட்டார். ஆனால், அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதும், வைகோ அவரை திருப்பியனுப்பினார். இதனால் ஏமாற்றமடைந்த அவர் விரக்தியுடன் திரும்பி சென்றார்.

இந்த சம்பவத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

வைகோவுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்றால் ரூ.100 கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் போட்டோ எடுக்க சென்ற நபர் திருப்பி அனுப்பப்பட்ட சம்பவத்தை செல்போனில் யாரோ வீடியோ எடுத்துள்ளனர். இந்த காட்சிகள் தற்போது வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதற்கிடையே சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி வரை சென்ற வைகோ ஆங்காங்கே நின்று கட்சியினரை சந்தித்து பணத்தை பெற்றுக்கொண்டு செல்பி எடுத்த வகையில் கட்சி நிதியாக ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் வசூல் ஆனதாக ம.தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply