வங்காளதேசத்தில் பயங்கர தீ விபத்து : 15 ஆயிரம் வீடுகள் எரிந்து சாம்பல்

வங்காளதேசத்தின் தலை நகர் டாக்காவின் உள்மாவட்டங்களில் ஒன்றான மிர்பூரில் சலந்திகா என்னும் இடத்தில் ஒன்றோடு ஒன்று ஒட்டியவாறு 1500-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இருந்தன. கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் அங்கிருந்த குடிசை வீடுகளில் திடீரென தீப்பற்றியது.

பல வீடுகளில் பிளாஸ்டிக் மேற்கூரைகள் அமைக்கப்பட்டிருந்ததால், தீ வேகமாக அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவியது. தீப்பற்றி எரிவதை அறிந்ததும் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்தபடி ஓட்டம் பிடித்தனர். அக்கம்பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயின் கோரப்பிடி வலுவாக இருந்ததால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இதற்கிடையில், தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், சுமார் 6 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த கோர சம்பவத்தில் சுமார் 15 ஆயிரம் வீடுகள் தீயில் கருகி சாம்பலாகின. இதனால் 50 ஆயிரம் பேர் வீடு மற்றும் உடைமைகளை இழந்து நிற்கதியாகி இருக்கிறார்கள். இந்த தீவிபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. எனினும் பலர் படுகாயமடைந்ததாக தெரிகிறது.

பக்ரீத் பண்டிகையையொட்டி பலர் வெளியூர் சென்றதன் காரணமாக பல வீடுகள் காலியாக இருந்ததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply