நாடு முழுவதுமான இன்றைய காலநிலை

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் தற்போது காணப்படும் காற்று நிலைமை அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிப்பு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், மத்திய சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பதுளை மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா, களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன் வடமேல் மாகாணத்திலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

அதேவேளை காங்கேசந்துறையிலிருந்து புத்தளம், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 60 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் ஓரளவு கொந்தளிப்பாகவும் காணப்படும்.

கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply