ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி கோர்ட் அனுமதி
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் டெல்லி ஐகோர்ட் முன் ஜாமீனை மறுத்த நிலையில், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை நேற்று இரவு சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்தனர். அவரது வீட்டின் சுவர் மீது ஏறி கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று மதியம் ஆஜர்படுத்தினர். அப்போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்பதால் 5 நாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனக்கோரி சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், அமைதியாக இருப்பது அவரது உரிமை. ஆனால் முக்கியமான கேள்விகளை தவிர்ப்பது ஒத்துழையாமைதான். ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு தொடர்பான விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவரை காவலில் எடுத்து விசாரித்தால் மட்டுமே ஐ என் எக்ஸ் மீடியா பற்றிய சதியின் உண்மைகள் வெளிவரும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, சிதம்பரம் தரப்பில் அவரது வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் அபிஷேக் சிங்வி ஆகியோர் வாதாடினார். இந்த வழக்கில் ஏற்கனவே கார்த்தி சிதம்பரம், ஆடிட்டர் பாஸ்கர ராமன் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. விசாரணை முடிந்து விட்டதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க அவசியமில்லை.
இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் வழக்கு தொடர்ந்து உள்ளீர்கள். வழக்கு விசாரணைக்கு தேவைப்படும் பட்சத்தில் தான் கைது நடவடிக்கை வேண்டும். ஐ.என்.எக்ஸ். மீடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு 6 செயலர்கள் ஒப்புதல் வழங்கி உள்ளனர்.
அந்த ஒப்புதலுக்கு அப்போதைய நிதி மந்திரி சிதம்பரம் இசைவு மட்டுமே தந்துள்ளார். அந்த 6 பேரில் ஒருவர் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டார். சாட்சிகளை கலைத்தார் என்று சிதம்பரம் மீது எந்த குற்றமும் சாட்டப்படவில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் அப்ரூவர் ஆனது ஒரு நிலை மட்டுமே.. அது சாட்சியமும் கிடையாது.. ஆவணமும் கிடையாது. எனவே, சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டனர்.
ப.சிதம்பரத்துக்கு எப்போது சம்மன் அனுப்பினீர்கள் என சி.பி.ஐ.க்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். இருதரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை அரைமணி நேரத்துக்கு ஒத்திவைத்தார்.
இதையடுத்து, முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
சிதம்பரம் கோர்ட்டுக்கு கொண்டு வரப்பட்டதை தொடர்ந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
மூலம்/ஆக்கம் : கவிதைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply