முன்னொரு காலத்தில் யுத்தம் இருந்தது!

மகிந்த மாத்தய எங்கள் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்

அரசு என்பது ஆச்சிரமம் நடத்திக்கொண்டிருக்கும் அமைப்போ
அல்லது தேர்தல்களை நடத்தி உறுப்பினர்கள் மந்திரிகள் முதன்மந்திரி உள்ளிட்ட பாராளுமன்ற அமைப்புமுறைமூலமாக மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் அமைப்போ அல்ல என நாம் பட்டுணர்ந்துள்ளோம்.

பொலிஸ்- இராணுவம்- நீதிமன்றம் – சிறைச்சாலை-இவற்றால் ஆனதுதான் அரசு இயந்திரமென்ற அரசறிவியலுக்கு அப்பால் அரசு
சமகாலத்தில் எப்படித்தொழிற்படும் என்பதற்கான ஆகச்சிறந்த உதாரணமும் சர்வதேசம் உலக ஒழுங்கு எப்படி இருக்கின்றது என்பதற்கான எடுத்துக்காட்டாகவும் நாம் நமது இலங்கை அரசைக்கேள்விக்கிடமின்றி சிறப்புதாரணம் கொள்ளமுடியும்.

அதேநேரத்தில் விடுதலைப்போராட்டம் என்பதன்பேரால் எப்படியான கொடூரங்களும் பயங்கரங்களும் உச்சபட்சமாக நிகழ்த்தமுடியும் என்பதற்கும் இந்த உலகத்தின் புத்தாயிரத்தின்தொடக்கத்தில் புதிய தசாப்தத்தில் நடந்துமுடிந்த நிகழ்வுகள் நமக்குமுன்னால் அள்ளிநிறைந்து கிடக்கின்றன.

போர் முடியும் என எல்லோரிடமும் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இருந்தபோதிலும் நல்லமாதிரி முடியவேண்டுமென இருந்த அசட்டு நம்பிக்கை
அபத்தமாக அவலச்சுவையுடன் முடிந்துள்ளது.இப்பேரழிவின் சுழலிலிருந்து கிழக்குமாகாணம் தன்னை மிகவும் புத்திசாலித்தனமாக விடுவித்துக்கொண்டிருக்கிறது.
இறக்கப்பிறந்தவனை சாகப்பண்ணி அதற்கொரு காரணஞ்சொல்லி..
என ஈழத்துக்கவிதை ஒன்று சொல்கிறது.*
இந்தப்போரிலே ஈடுபட்டுத்தப்பியோடியவர்களுக்குத்தான் தெரியும் அதனது பயங்கரங்களும் அவலங்களும்.

நமது மாவீரர் குடும்பங்கள் இனி எப்படி எதிர்கொள்ளப்படும் என்பதை எழுதாமல் இருப்பது அவர்கள் மரணங்களைக் கொச்சைப்படுத்தாமல் இருக்க உதவும்.
தியாகிகள்-துரோகிகள் எனப்பிளவுபடுத்தப்பட்ட சமூகவகைப்படுத்தலிலிருந்து
இந்தப்போர் முடிவு மாபெரும் விடுதலையை அழித்திருக்கிறது.

இந்தவகையில் மகிந்த மாத்தயா எம் மரியாதையை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சிங்கள சினிமா மட்டுமல்ல சிங்கள அரசியலும் உலகத்தரம் வாய்ந்தது என மாத்தையா நீங்கள் நிறுவியிருக்கிறீர்கள்.

தேசியப்பெருமிதங்களும் இனப்பெருமைகளும் எங்குதானில்லை?

இனம்-மொழி-தேசம்-தன்னாட்சி- சுயநிர்ணய உரிமை-விடுதலை-உரிமை – சுதந்திரம் – இவற்றிற்கு எதிர்மறையான அர்த்தங்களை வழங்கியதென்றவகையில் மோசமான முன்னுதாரணமாகவும் சர்வதேச போராட்ட சக்திகளுக்கும் எதிர்ப்பியக்கங்களுக்கும் குழப்பத்தையும் நம்பிக்கையீனத்தையும் எச்சரிக்கையையும் வழங்கியிருக்கிறோம்.

இந்த முப்பதாண்டுகாலத்தில் இந்தப்போரிற்கான எதிர்ப்பில் இந்த யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என மிகவும் மெலிதான ஈனஸ்வரத்தில் ஒலித்த எப்போதும் ஒலித்துக்கொண்டிருந்த போர் எதிர்ப்புப் போராளிகளுக்கு இந்த போர் முடிவு கசப்பான வெறுமையான வேதனையான துயர்மிகுந்த வெறுத்துப்போன மனநிலையை அளிக்கிறது.

”இந்த அராஜக யுத்தங்கள் நாகரீக சமுதாயத்தின் நல்விழுமியங்கள் அனைத்தையும் தடயமே இல்லாமல் குழிதோண்டிப்புதைத்தன” என சிங்கள சமூகத்தின் புரட்சியாளரான தயபால திராணகம ஆயிரத்தித் தொளாயிரத்து தொண்ணூறாம் ஆண்டில் “துப்பாக்கிக்கலாசாரத்திலிருந்து மீள்வது எப்போது?” என்றதனது கட்டுரையில் நமது புகலிட சஞ்சிகையில் குறிப்பிடுகிறார்.

“செம்மனச்செல்வி சிவபெருமானுக்கு அடித்த அடி ஏன் எல்லா உயிர்கள்மேலும் படவேண்டும். அடிக்க ஒருபிரம்பு இருந்ததால் ..” என்ற நியாயமான கேள்வியிலிருந்து “ஆயுதங்களை வீசி எறிவோம் கடலுக்குள்….” என்பதுவரை போர் எதிர்ப்பில் இலக்கிய முகம் எதிர்ப்பு இலக்கியமாகவே இருக்கிறது.

துப்பாக்கிகளின் பேரைச்சொல்வதே கெளரமாகிப்போன தேசத்தில் மானுடத்தை யார் மதித்தார்….என கவிதை மானுட மேன்மைக்காக அழுதிருக்கிறது.

அறம் ஆன்மீகம் சகோதரத்துவம் அன்பு கருணை பரிவு நேசம் இவற்றிற்கும் சக மனிதரை மதித்தல் என்ற பக்குவத்திற்கும் இனி தமிழ்ச்சமூகம் தயாராகவேண்டியுள்ளது.

-சுகன் (தாயகம்)

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply