விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலை அழிப்பதற்கு சர்வதேசத்தின் உதவியைக் கோரியது இலங்கை
விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் சர்வதேச வலைப்பின்னலைத் தடுப்பதற்கு உலக நாடுகள் உதவ வேண்டுமென இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற உயர்மட்ட பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உலகளாவிய ரீதியில் முழுமையாகத் தோற்கடிக்கப்படாமல் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், விடுதலைப் புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்பும் நோக்கில் புத்திசாலித் தனமாகப் பல்வேறு நாடுகளில் அந்த அமைப்பு வியாபிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
“விடுதலைப் புலிகளின் சர்வதேச வலைப்பின்னலைக் கண்டுபிடித்து அழிப்பதற்கு சர்வதேச சமூகம் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்” என்றார் அமைச்சர்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் இராணுவத்தினர் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை மறுத்த போகல்லாகம, இன அழிப்பு நடைபெறுவதாகத் தமிழர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் ஒரு அங்கமே இந்தக் குற்றச்சாட்டு எனவும் கூறினார்.
“பயங்கரவாதம் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டது என்ற வரலாற்றுத் தகவல் பாடப் புத்தகங்களில் உள்ளடக்கப்படும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கும்” என்றார் அமைச்சர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply