நலன்புரி நிலையங்களில் தவிக்கும் முதியவர்கள் உறவினர்களுடன் சேர்ந்து வாழ வேண்டும்: ஆனந்தசங்கரி
வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வந்து நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த முதியவர்கள் உறவினர்களுடன் சென்று வசிப்பதற்கு உடன் ஏற்பாடு செய்யுமாறு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கடிதம் மூலம் கோரியுள்ளார். அவர் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:
“நான் முன்னர் விடுத்த வேண்டுகோள்களுக்கு அமைவாக இதுவரை பல முதியவர்களைப் பராமரிக்கக் கூடியவாறு உறவினர்கள் பொறுப்பேற்பதற்கு வசதி செய்யப்பட்டிருந்தது. இருந்த போதும் இன்னும் பலர் தனிமையில் வாடுகின்றனர். தம்மை இன்னார் என்று அறிவிக்க முடியாதளவுக்கு வயது முதிர்ந்த நிலையில் அங்கு உயிர்வாழ்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் மெல்ல மெல்ல செத்துக் கொண்டிருக்கின்றார்கள். வசதி படைத்த அவர்களின் உறவினர்களும், பிள்ளைகளும் வெளிநாடுகளிலும் இலங்கையின் தூர இடங்களிலும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் உறவினர்கள் இவர்களது நிலைமையை அறிந்து கொள்ள இயலாமல் துயரமடைந்துள்ளார்கள். முகாம்களில் ஒலிபெருக்கி மூலமாகக் கொடுக்கப்படும் அறிவித்தல்களும் அவர்களது செவிகளில் ஏறுவதில்லை. உணவு வழங்கப்படும்போது, அதனைப் பெற்றுக் கொள்வதற்கு வரிசையில் நிற்க இயலாமல் அவர்கள் படும் துன்பம் சொல்லில் அடங்காது. எனவே அவர்கள் தொடர்பான பெயர் விபரங்களை உடன் வெளியிடுவதுடன், தயவு செய்து தனியாக விடப்பட்டவர்களை ஒருங்கிணைக்குமாறும் தங்களை தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இராமநாதன் முகாமில் தங்கியுள்ள தனது மைத்துனரைச் சந்திப்பதற்காக பிரான்சிலிருந்து வந்திருந்த அவரின் 55 வயதான வைரமுத்து செல்வராசா, கடந்த 27 ஆம் திகதி கொழும்பில் இறந்துவி்ட்டார் என்பதைத் தங்களின் கவனத்திற்கு வேதனையுடன் கொண்டு வருகிறேன். இதுபோன்று அநேக சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவை துயரப்படும் மக்களின் துன்பத்தை மென்மேலும் அதிகரிக்கச் செய்வனவாகும்.
கடந்த வாரம் இனம் காணப்படாத 66 பேர் வவுனியா பூந்தோட்டம் மயானத்தில் அனாதை சடலங்களாக அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்கும், இவ்வாறானவர்களை உடன் அடையாளம் காணவும் ஏற்பாடு செய்யுமாறும், வவுனியா வைத்தியசாலையில் மேலும் ஒரு பிரேத அறையை அமைப்பதற்கு உடன் ஏற்பாடு செய்யுமாறும் முன்னர் நான் தங்களிடம் விடுத்த வேண்டுகோளை தயவு செய்து கவனத்தில் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply