தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப் போராட்டமும், அதைச்சார்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டுவரவில்லை: மனோ கணேசன்

 புலிகளின் ஆயுதப்போராட்டம் முடிவிற்கு வந்துவிட்டது. இந்த உண்மையை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். புலம் பெயர்ந்துள்ளவர்களின் போராட்டங்கள் தமிழினத்தின் பிரச்சினைகளை இன்று உலகறிய செய்திருப்பது உண்மை. ஆனால் இலங்கைத் தீவில் வாழ்கின்ற தமிழ் மக்களின் வரலாற்றுக் கேள்விகளுக்கு புலிகளின் ஆயுதப்போராட்டமும், அதைச்சார்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் கவனஈர்ப்பு போராட்டங்களும் விடைகளை கொண்டுவரவில்லை என்ற கசப்பான உண்மை புரிந்து கொள்ளப்படவேண்டும் என மேல்மாகாண மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

1940களில் தொடங்கப்பட்ட தமிழர்களின் தேசிய போராட்டத்தின் தலைமையை 1970களில் தொடங்கப்பட்ட ஆயுதப்போராட்டம் சுவீகரித்துக்கொண்டது. ஆயுதப்போராட்டம் தோற்றுவித்த யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டாலும், தேசிய போராட்டத்தை தோற்றுவித்த அரசியல் காரணங்கள் அப்படியே இருக்கின்றன.

தேசிய இனப்பிரச்சினையை தோற்றுவித்த இந்த காரணங்களுக்கு படிப்படியாக பதில் தேடும் தேவையை மறந்து ஆயுதப்போராட்டம் கொண்டுசெல்லப்பட்டதனாலேயே இன்று தோல்வி ஏற்பட்டுள்ளது.

இந்த தோல்வியுடன் இந்நாட்டிலே தமிழ் இனம் ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் திரும்பியுள்ளது. அத்துடன் மேலதிக சுமையாக மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் வாழவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் நமது மக்கள் தொகையில் பத்தில் ஒருவர் அங்கவீனராக உள்ளனர்.

இரண்டு பெற்றோர்களையும் இழந்துவிட்ட பெருந்தொகை குழந்தைகள் இருக்கின்றார்கள். பிள்ளைகளை இழந்துவிட்ட பெருந்தொகை அனாதை வயோதிப பெற்றோர்களும் இருக்கின்றார்கள். மிகப்பெருந்தொகையானோருக்கு தமது குடும்ப அங்கத்தவர்கள் உயிருடன் இருக்கின்றார்களா அல்லது உயிருடன் இருந்தால் எங்கே இருக்கின்றார்கள் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. தனித்துவிட்ட பெண்களின் பாதுகாப்பான வாழ் நிலைமைகள் கேள்விக்குறியாகவுள்ளன. மந்தபோசனமும், தொற்றுநோயும், பசியும் நமது மக்களை வாட்டுகின்றன.

இந்நிலையில் நமது மக்களின் அகதிவாழ்க்கை தொடர்பிலான கேள்விகளுக்கு விடைகளை தேடுவதிலும், அரசியல் தீர்வு தொடர்பில் நிலவுகின்ற கேள்விகளுக்கு விடைகளை தேடுவதிலும் சமாந்தர போக்கை கடைபிடிக்கவேண்டியது அனைத்து தமிழ் அரசியல் சக்திகளின் வரலாற்று கடமையாகும்.

இந்த இரட்டை நோங்கங்களை அடைவதற்கு நாம் இலங்கை மண்ணில் இருந்தப்படி ஜனநாயக ரீதியாக செயற்படுகின்றோம்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் மத்தியில் இருந்து செயற்படும் தமிழ் அரசியல் தலைமைகளுக்கு துணை சக்தியாக மாத்திரமே புலம் பெயர்ந்த தமிழர்களின் எதிர்கால நடவடிக்கைகள் அமையவேண்டும். இதை புலம் பெயர்ந்த தமிழ் சமூகம் புரிந்து கொள்ளவேண்டுமென மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply