துருக்கி மீது பொருளாதார தடைகளை விதித்தார் டிரம்ப்

சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதாக டிரம்ப் அறிவித்த பிறகு அங்குள்ள குர்து போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் குர்து போராளிகள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பலியாகினர்.

துருக்கியின் இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன. போர் நடவடிக்கைகளை நிறுத்தாவிடில், துருக்கியின் பொருளாதாரம் முற்றிலும் அழிக்கப்படும் என 4 தினங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப், துருக்கி அரசுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், இந்த எச்சரிக்கையை துருக்கி அரசு கண்டுகொள்ளவில்லை. ‘அமெரிக்க அதிபர் டிரம்பின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சி எங்கள் கொள்கைகளை மாற்றிக்கொள்ள மாட்டோம். குர்து போராளிகள் மீதான போர் நடவடிக்கைகளை நிறுத்தப்போவதில்லை’ என துருக்கி நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மெவுல்ட் காவ்சக்லோ தெரிவித்தார். அதன் பின்னரும் துருக்கி தனது போர் நடவடிக்கைகளை தொடர்ந்தது.

இந்நிலையில், துருக்கி மீதான பொருளாதாரத் தடைகளை விதிக்க தனது நிர்வாகத்திற்கு அதிகாரம் அளிக்கும் நிர்வாக உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். துருக்கி அரசு மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளதாகவும், துருக்கியுடனான 100 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தையையும் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

அதே நேரத்தில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசிக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் துருக்கி பிரச்சினையை ‘தேசிய அவசரநிலை’யாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் கருவூலத் துறை, ஏற்கனவே துருக்கி பாதுகாப்பு மந்திரி ஹுலுசி அகர், உள்துறை மந்திரி சுலேமான் சோய்லு மற்றும் எரிசக்தி மந்திரி பாத்தி டான்மேஸ் ஆகியோரை அதன் பொருளாதாரத் தடைகள் பட்டியலில் வைத்துள்ளது.

இது குறித்து டிரம்ப் கூறுகையில், ‘துருக்கி தலைவர்கள் இந்த ஆபத்தான மற்றும் அழிவுகரமான போர் நடவடிக்கைகளை தொடர்ந்தால் துருக்கியின் பொருளாதாரத்தை விரைவில் முழுமையாக அழிக்க நான் தயாராக இருக்கிறேன்,

இந்த பொருளாதார தடை உத்தரவானது, பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் நடவடிக்கைகள், வடகிழக்கு சிரியாவில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை மேலும் மோசமடைய வழிவகுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள துருக்கிய அரசாங்கத்தின் தனிநபர்கள், நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகளை பரிசீலித்து விதிக்க மாநில மற்றும் கருவூலத் துறைகளுக்கு அதிகாரம் அளிக்கிறது.

துருக்கி மீதான பொருளாதாரத் தடைகள், நிதித்துறைகள் மீதான தடை, சொத்துக்களைத் தடுப்பது, அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுப்பது உள்ளிட்ட பரந்த அளவிலான நடவடிக்கைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும். 100 பில்லியன் அமெரிக்க டாலர் வர்த்தக ஒப்பந்தத்தில் துருக்கியுடனான பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா உடனடியாக நிறுத்திவிடும்’ என கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply