உலக உணவு தினத்தை முன்னிட்டு 5 பைசாவுக்கு பிரியாணி
அக்டோபர் 16-ந் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு திண்டுக்கல்லில் ஒரு பிரியாணி கடையில் 5 பைசா கொண்டு வந்தால் ½ பிளேட் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
முதலில் வரும் 100 நபர்களுக்கு பார்சலில் இந்த பிரியாணி பொட்டலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மதியம் 12 மணிக்கு பிரியாணி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் காலை 10 மணியில் இருந்தே கடை முன்பு ஏராளமானோர் கூடினர்.
ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பிரியாணி வாங்க வரிசையில் காத்திருந்தனர். அதன் பின் 5 பைசா நாணயத்தை வாங்கி வைத்துக் கொண்டு 100 பேருக்கு பிரியாணி பொட்டலங்கள் வழங்கப்பட்டது.
இது குறித்து கடையின் உரிமையாளர் சேக் முஜிபூர் ரகுமான் தெரிவிக்கையில், தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லை என்றால் இந்த உலகத்தையே அழித்து விட வேண்டும் என்று மகாகவி பாரதி பாடினார். உணவின் தேவையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் பழமையான பொருட்களின் பெருமையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
தற்போது கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சி மூலம் நமது தமிழர்களின் பழங்கால தொன்மை தெரிய வந்துள்ளது. இது உலகம் முழுவதும் நிச்சயம் சேரும் என்ற நம்பிக்கை உள்ளது.
அதே போல்தான் செல்லாத நாணயத்தை கூட சேமித்து வைத்தால் பெருமையை தரும் என்பதை உணர்த்தும் வகையில் 5 பைசா நாணயத்தை கொண்டு வந்து கொடுத்தால் பிரியாணி தரப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டோம். ஆனால் ஏராளமானோர் செல்லாத 5 பைசா நாணயங்களை வைத்திருந்தது மிகவும் ஆச்சரியம் அளித்தது.
இதே போல நமது வருங்கால தலைமுறையினரும் நாணயத்தின் மதிப்பை உணர்வதோடு பசியில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்க உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஏற்பாட்டை செய்தோம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply