சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க சட்டப்பூர்வ நடவடிக்கை: வக்கீல் பேட்டி
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். கடந்த 15.2.2017-ல் இருந்து சசிகலா சிறையில் இருந்து வருகிறார். அவரது தண்டனை காலம் 14.2.2021-ல் முடிவடைகிறது.
இருந்தபோதிலும் நன்னடத்தை அடிப்படையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை செய்யப்பட உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவின.
சிறை விதிகள்படி தண்டனை கைதி ஒருவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பகுதி காலத்தை எந்தவித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் சிறையில் கழித்து விட்டால் நன்னடத்தை அடிப்படையில் அவர் முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு தகுதி உடையவர் ஆகிறார்.
இந்த விதிகள்படி பார்த்தால் சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையில் அவர் 2 ஆண்டுகள் 8 மாதங்கள் சிறையில் இருந்து விட்டால் அவர் நன்னடத்தை விதிகள்படி முன்கூட்டியே விடுதலையாக தகுதி உடையவர் ஆகி விடுகிறார்.
இந்தநிலையில் தான் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளையொட்டி சிறை தண்டனையில் பாதி காலத்தை கழித்த தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசு சிறப்பு உத்தரவு பிறப்பித்தது.
கர்நாடக மாநிலத்தை பொறுத்தமட்டில் இந்த சிறப்பு உத்தரவு அடிப்படையில் 141 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அதேவேளையில் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் சிறை தண்டனை பெற்றவர்களுக்கு இந்த சிறப்பு சலுகை வழங்கப்படக்கூடாது என்று மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறை, சசிகலா
இந்த நிபந்தனை காரணமாக கர்நாடக சிறையில் இருந்து விரைவில் விடுவிக்கப்பட உள்ள 141 கைதிகள் பட்டியலில் சசிகலா பெயரும் இடம்பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
ஆனாலும், அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்க சசிகலா தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சசிகலா தரப்பு வக்கீல் ராஜாசெந்தூர்பாண்டியன் கூறியதாவது:-
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள சிறப்பு உத்தரவுப்படி சசிகலாவை முன்கூட்டியே விடுவிக்க முடியாது என்று தான் கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
சசிகலாவை பொறுத்தமட்டில் பொதுவான சிறை விதிகள்படி நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுவிக்க தேவையான மூன்றில் இரண்டு பகுதி தண்டனை காலத்தையே சிறையில் கழித்து விட்டார்.
இந்த அடிப்படையில் சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
ஊழல் குற்றச்சாட்டின் கீழ் தண்டனை பெற்ற கைதியாக இருந்தாலும் சிறைத்துறையின் பொதுவான விதிகள்படி நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. எனவே, சசிகலாவை பொறுத்தமட்டில் அவர் முன்கூட்டியே விடுதலை ஆவதற்கு சாதகமான வாய்ப்புகள் சட்டப்பூர்வமாக அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply