கொழும்பில் படையினரின் வெற்றியை கொண்டாடும் தேசிய வைபவம்

பயங்கரவாதத்தை முழுமையாக முறியடித்ததன் வெற்றியைக் கொண்டாடும் தேசிய வைபவம் இன்று கொழும்பில் கோலாகலமாக நடைபெறுகின்றது. மிகவும் பிரமாண்டமான முறையில் கொழும்பு காலி முகத்திடலில் இன்று காலை நடைபெறவுள்ள வைபவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்கவுள்ளார். இதனையிட்டு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் போக்குவரத்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு உட்பட சகல பிரதேசங்களிலும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன. காலி முகத் திடலில் இன்று காலை ஆரம்பமாகவுள்ள பிரதான வைபவத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார். பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்கு பண்டார, பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் முக்கியஸ்தர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பாதுகாப்புப் படையினரின் வெற்றியைப் பாராட்டும் வகையிலும், அவர்களது சாகசங்களை வெளிப்படுத்தும் வகையிலும் முப்படையினர் மற்றும் பொலிஸாரின் மரியாதை அணி வகுப்புகளும் இடம்பெறுகின்றன.

முப்படையினரின் மரியாதை அணி வகுப்பில் 295 அதிகாரிகளும் 4915 படை வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளதுடன் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் உள்ளடங்கிய 500 பேர் பங்கு கொள்ளவுள்ளனர்.

இந்த அணி வகுப்பின் போது யுத்தத்தில் படையினரால் பயன்படுத்தப்பட்ட கனரக ஆயுதங்களின் பவனியும், கடல் மற்றும் விமானப் படையினரின் சாகசங்களும் இடம்பெறவுள்ளன.இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசேட உரையாற்றவுள்ளதுடன் வடக்கு, கிழக்கு மீட்பு நடவடிக்கைகளின் போது களமுனையிலிருந்து செயற்பட்ட படைவீரர்கள் மற்றும் படைத் தளபதிகளும் விசேடமாக கெளரவிக்கப்படவுள்ளனர்.

இம்முறை அணி வகுப்பின் போது யுத்த நடவடிக்கையின் போது அங்கவீனமுற்ற படை வீர்ரகளும் சக்கர நாற்காலிகளில் இருந்தவாறு பங்கேற்கவுள்ளனர். பாடசாலை மாணவ, மாணவிகளினது அணிவகுப்புக்களும், கலாசார பாரம்பரியங்களை பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் இடம்பெறவுள்ளது.

இராணுவ அணிவகுப்பு

இராணுவ அணி வகுப்பில் யுத்தத்திற்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள், கவச வாகனங்கள், பீரங்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், 122, 152, 130 ரக கனரக பீரங்கிகள், பல்குழல் ஏவுகணைகள், சமிக்ஞை, ராடார் கருவிகள், திசை காட்டி படைப் பிரிவுகள் என்பனவும் கலந்துகொள்ளவுள்ளன.

கடற்படை அணிவகுப்பு

கடற் படையின் அணி வகுப்பில் 18 அதிகாரிகளும், 745 வீரர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இதன்போது காலி முகத் திடல் கடலில் கடற் படையினரின் பல்வேறு சாகசங்களும் காண்பிக்கப்படவுள்ளன.

கடற் படையின் ஜெட் லைனைர் பயணிகள், கப்பல் தொடக்கம் புலிகளுக்கு எதிரான கடல் வழி தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட சயூர, சமுத்திர, சாகர, சுரணிமல, நந்தமித்ர, உதார மற்றும் பிரதாப ஆகிய கப்பல்களும், கடற் படையின் தாக்குதல் படகுகள், அதிவேக டோர படகுகள், விசேட ரோந்து படைப் பிரிவு படகுகள் உட்பட பல படகுகளும் இந்த சாகசங்களில் கலந்து கொள்ளவுள்ளன.

விமானப் படை அணி வகுப்பு

விமானப் படையின் 15 அதிகாரிகளும் 500 விமானப் படை வீரர்களும் 40 விமானங்களும் இதில் பங்குபற்றுகின்றன.விமானப் படையின் சகல பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

விமானப் படை ஹெலிகள், மற்றும் விமானங்கள் தேசிய கொடியை பறக்கவிடப்பட்ட நிலையில் வானில் சுமார் ஆறாயிரம் அடி தொடக்கம் மூவாயிரம் அடி வரையான உயரத்தில் வானில் பறந்து கொண்டு தமது சாகசங்களை வெளிப்படுத்தவுள்ளன. எப் – 7, கிபீர், மிக் – 27, ஜி விமானப் படையின் தாக்குதல் விமானங்களும், பெல் – 212, எம். ஐ. – 17, எம். ஐ. – 24 ரக ஹெலிகளும், எண்டனோ, வை – 12 ரக போக்குவரத்து விமானங்களும் பங்குகொள்ளவுள்ளதுடன் தமது சாகசங்களை வெளிப்படுத்தவுள்ளனர்.

அத்துடன் விமானப் படையின் பரசூட் பிரிவு வானில் பறந்து தமது சாகச விளையாட்டுக்களை காண்பிக்கவுள்ளனர்.

பொலிஸ் அணி வகுப்பு

பொலிஸாரின் அணி வகுப்பில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் உள்ளிட்ட 500 பேர் கலந்துகொள்ளவுள்ளனர். பொலிஸாரின் அணி வகுப்பில் பொலிஸ் பெண்கள் பிரிவினர்,. விசேட அதிரடிப் படையினரின் பல பிரிவுகள், பொலிஸ் குதிரைப் படைப் பிரிவினர் மற்றும் சுமார் 144 வருட பழைமை வாய்ந்த பொலிஸ் பேண்ட் வாத்தியக் குழுக்களும் கலந்துகொள்ளவுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply