வேட்டி கட்டினால் மட்டும் ஓட்டு கிடைக்காது : கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் வருகிற 7-ந்தேதி தனது 65-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வார இதழுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். இதில் அவர் மோடியையும் அமித்ஷாவையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

மோடி, அமித்ஷா பற்றிய கேள்விக்கு கமல்ஹாசன் கூறியிருப்பதாவது:-

“நாகலாந்துக்கு போகும்போது கொம்பு வைத்த தொப்பி போட்டுக் கொண்டு நடனம் ஆடுவார்கள். அம்பு விடும் கூட்டத்துக்கு போய் அம்புவிட்டுவிட்டு அதன்பிறகு அதை தொடவே மாட்டார்கள்.

இதெல்லாம் காலம் காலமாக அரசியல்வாதிகள் செய்வது. இதற்கெல்லாம் மக்கள் மயங்கிவிட மாட்டார்கள். எல்லோருக்கும் ‘அட, இவருக்கு வேட்டி கட்டத் தெரியுமா?’ அப்படி என்கிற ஆச்சர்யம் மட்டுமே முதலில் நிற்கும். வேட்டி கட்டினால் மட்டும் தமிழ்நாட்டில் ஓட்டு விழுமா? அதற்கு அவர் செய்யவேண்டிய செயல்கள் மக்களைச் சென்றடையும் செயலாக இருக்க வேண்டும்.

இந்தியை பொறுத்தவரை நமக்கு வெறுப்பு கிடையாது. எந்த மொழி மீதும் வெறுப்பு கிடையாது. இதை வட இந்தியாவில் வசிப்பவர்கள் சரியாக புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள். மற்ற மொழிகள்மீது வெறுப்பு இருந்தால் நெஞ்சை நிமிர்த்தி சந்தோ‌ஷமாக வங்கமொழியில் நாம் தேசிய கீதம் பாடுவோமா” என்று கூறியுள்ளார்.

அரசியலுக்கு வரவேண்டாம் என்று நடிகர் சிரஞ்சீவி கூறிய அறிவுரைக்கு பதில் அளித்துள்ள கமல் “எனக்கு நெருங்கிய நண்பர் அவர். ஆனால், அவருடைய அனுபவம் என்னுடைய அனுபவமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லா அறிவுரைகளையும் கேட்டுக்கொள்ளலாமே தவிர அதன்படி நடக்கவேண்டிய அவசியம் இல்லை’’ என்றார்.

“வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கூட்டணி அமைத்து போட்டியிட வாய்ப்பு இருக்கிறதா”என்ற கேள்விக்கு “வாய்ப்பு நிறையவே இருக்கிறது. ஆனால், இந்த முடிவு கொள்கை சம்பந்தமானது. தமிழகத்துக்கு எது வேண்டும் என்கிற நேர்மை சம்பந்தமானது. மிக ஜாக்கிரதையாக கூட்டணி அமைக்க வேண்டும். கூட்டணி பற்றி விரோத மனப்பான்மை கிடையாது. ஆனால், நேர்மைக்கு விரோதமான எவற்றையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை எங்களுக்கு உண்டு’’ என்றும் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply