பாகிஸ்தானில் வலுக்கும் போராட்டம் : பிரதமர் இம்ரான்கான் பதவி விலக 2 நாள் கெடு

பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இம்ரான்கான் வெற்றி பெற்று பிரதமர் ஆனார். அந்த தேர்தலில் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக ஜாமியக் உலேமா-இ- இஸ்லாம் பசல் (ஜே.யு.ஐ.-எப்) கட்சி தலைவரும், மதகுருவுமான மவுலானா பஷ்லூர் ரஹ்மான் குற்றம்சாட்டி வருகிறார்.

திறமையின்மை, மோசமான நிர்வாகம் காரணமாக மக்களின் கஷ்டம் அதிகரித்துவிட்டது. அவர் தொடர்ந்து பதவியில் நீடித்தால் பாகிஸ்தானின் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும். எனவே அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என இஸ்லாமாபாத்தில் முற்றுகை போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

இதையடுத்து கடந்த மாதம் (அக்டோர்) 27-ந்தேதி சிந்து மாகாணத்தில் இருந்து பேரணி தொடங்கப்பட்டது. இந்த பேரணி சுக்கூர், முல்தான், லாகூர் வழியாக நேற்று இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது.

அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் முஸ்லீம்லீக் நனாஸ் கட்சி, பாகிஸ்தான் மக்கள் கட்சி, பக்துன்கவா மில்லி அவாமி கட்சி, சுவாமி தேசிய கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன. அதில் அக்கட்சியின் தலைவர்கள் அக்சன் இக்பால், கவாஜா ஆசிப், பிலாவல்பூட்டோ சர்தாரி, மைக்மூத் தான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இவர்களுடன் அக்கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இஸ்லாமாபாத்தில் பதட்டம் நிலவுகிறது.

கூட்டத்தில் ஜாமியத் உலேமா- இ-இஸ்லாம் பசல் கட்சி தலைவர் மவுலானா பஸ்லூர் ரஹ்மான் பேசும்போது, இது சுதந்திரத்துக்கான பேரணி என குறிப்பிட்டார். இம்ரான்கானின் திறமையைற்ற நிர்வாகத்தின் காரணமாக பாகிஸ்தான் பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும்.

எனவே பாகிஸ்தானின் கார்ப்பசேவ் உடனே பதவி விலக வேண்டும். அதற்காக அவருக்கு 48 மணி நேரம் அதாவது 2 நாள் கெடு தருகிறோம். போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அமைதியும், பொறுமையும் காத்துவருகின்றனர். அவர்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம்.

ஆகவே இம்ரான்கான் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தினார். இம்ரான்கான் பதவியை ராஜினாமா செய்யும் வரை இங்கிருந்து தொண்டர்கள் யாரும் வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். அடுத்த கட்ட போராட்டம் குறித்து எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி முடிவு செய்யும் என்றார்.

பேரணி மற்றும் போராட்டத்தை முன்னிட்டு இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் ராஜினாமா கோரிக்கையை இம்ரான்கான் நிராகரித்து விட்டார். சிறையில் இருக்கும் எதிர்க்கட்சி தலைவர்களை விடுதலை செய்ய நெருக்கடி கொடுக்கவே இப்போராட்டம் நடத்தப்படுவதாக கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply