தமிழரசுக் கட்சியின் ஆதரவு சஜித் பிரேமதாசாவுக்கு : சுமந்திரன்

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழுவின் ஏகமனதான தீர்மானத்தின் பிரகாரம் அன்னச்சின்னத்தில் போட்டியிடும் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் ஒன்று நடாத்தி இருக்கிறோம். இது தொடர்பாக தமிழ் தேசியகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழு மற்றும் நாடாளுமன்ற குழு கூட்டங்களிலும் ஆராயப்பட்டிருந்தது.

இன்று எமது மத்திய செயற்குழுவின் முடிவாக அன்னம் சின்னத்தில் போட்டி இடுகின்ற சஜித் பிரமதாசவை ஆதரிக்க வேண்டும் என்ற தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் இலங்கை தமிழரசு கட்சியின் உத்தியோகபூர்வ செயற்குழு எடுத்திருந்தாலும் தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாக இருக்கின்ற காரணத்தினால் இதனை அறிவிப்பது மற்றும் தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவேண்டிய விடயங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கைகளில் நாம் ஒப்படைத்துள்ளோம்.

மற்றைய இரண்டு கட்சித்தலைவர்களோடும் கலந்தாலோசித்து இந்த தீர்மானத்தை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை அவர் மேற்கொள்வார்.

பல விடயங்களை ஆராய்ந்திருக்கிறோம். பிரதான வேட்பாளர்கள் இருவர் தொடர்பில் தான் எமது கருத்துக்கள் இருந்தது.

அவர்களுடைய கடந்த கால செயற்பாடுகள், தேர்தல் அறிக்கைகள் தொடர்பாக பல விடயங்களை நாம் ஆராய்ந்து இன்றைய சூழலில் எமது மக்களுக்கு உபயோகமான ஒரு நடவடிக்கையாக சஜித்தை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை ஏகமனதாக எடுத்துள்ளோம்.

எமது கருத்தையும் மக்கள் கேட்கிறார்கள் மக்கள் திறமைசாலிகள் அவர்களிற்கு அரசியல் நன்றாகவே தெரியும். தமிழ் மக்கள் நிதானித்து வாக்களிப்பவர்கள்.

அவர்களிற்கு அரசியல் தலைமைத்துவம் கொடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. ஆகவே மக்களுடைய கருத்தையும் நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் கொடுப்பது என்பது நீங்கள் விரும்புபவர்களுக்கு வாக்களியுங்கள் என்று சொல்லுவது அல்ல.

நிதானித்து தற்போது இருக்கும் அரசியல் சூழ்நிலையிலே தமிழ் மக்கள் சார்பாக ஏனைய தரப்புகளுடன் மக்களின் பிரதிநிகளாக நாம் பேச்சுவார்த்தை நடாத்துகிறோம்.

அந்தக் கடப்பாட்டை நாம் சரிவர செய்வதாக இருந்தால் மக்களிற்கு ஒரு வழி காட்டுதல் கொடுக்கவேண்டிய அத்தியாவசிய கடப்பாடு இருக்கிறது அதை நாங்கள் செய்வோம் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply