‘போர் முடிந்து அமைதியான புதிய யுகத்துக்குள் பிரவேசிக்கும் காலத்தில்’ ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் ஆபத்துகளுக்கு முடிவைக் கட்ட ஜனாதிபதியும் அரசாங்கமும் முன்வரவேண்டும்
போர் முடிவடைந்த பின்னரும் கூட இலங்கையில் ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள் தணிந்தபாடாக இல்லை. நேற்று முன்தினம் மாலை உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் போத்தல ஜயந்த தலைநகர் கொழும்புக்கு வெளியே நுகேகொடையில் வைத்து வெள்ளைவானில் வந்த இனந்தெரியாத கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டு படுமோசமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். தனது கடமை முடிந்து பஸ்ஸில் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த அவர் எம்புல் தெனிய சந்தியில் இறங்கிய போதே கடத்தப்பட்டிருக்கிறார்.
மாலை 6 மணியளவில் முல்லேரியாவில் அக்கொன பகுதியில் காயங்களுடன் மயக்க நிலையில் கிடந்த ஜெயந்தவை மக்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவரது தாடியும் தலைமுடியும் பல இடங்களில் வெட்டப்பட்டிருப்பதுடன் இடது காலில் படுகாயமும் ஏற்பட்டிருக்கிறது.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் “றிவிர’ சிங்களப் பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான உபாலி தென்னக்கோன் கடந்த ஜனவரி பிற்பகுதியில் கடவத்தையில் வைத்து ஆயுதபாணிகளினால் தாக்கப்பட்டதற்குப் பிறகு இன்னொரு சிரேஷ்ட ஊடகவியலாளர் தாக்குதலுக்கு இலக்கான அடுத்த சம்பவமாக ஜயந்த மீதான தாக்குதல் அமைந்திருக்கிறது. ஊடகத்துறையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் அதிகரித்துவருவது குறித்து தங்கள் விசனத்தை தெரிவிப்பதற்காக உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், சுதந்திர ஊடக இயக்கம், பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பு மற்றும் இலங்கை பத்திரிகை நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கொண்டிருந்த வேளையிலேயே ஜயந்த மீதான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுதந்திர ஊடக இயக்கத்தின் செயலாளர் சுனில் ஜெயசேகர தெரிவித்திருக்கிறார்.
2006 ஜனவரிக்குப் பிறகு இலங்கையில் 9 ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் 27 ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு ஆளாகியிருப்பதாகவும் கடந்த ஜனவரியில் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பிரதம கொறடாவான நகர அபிவிருத்தி அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்து பட்டியலொன்றை சமர்ப்பித்திருந்தார். அதற்குப் பின்னரான நான்கு மாத இடைவெளியிலும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன. உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தை நோக்கும் போது ஊடகத்துறையினருக்கு எதிரான ஆபத்துக்கள் தொடர்ந்து செல்வதற்கான விபரீதமான அறிகுறிகளையே காணக்கூடியதாக இருக்கிறது.
ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்பட்ட மற்றும் தாக்குதலுக்குள்ளான ஏனைய சம்பவங்களின் போது கண்டனங்களைத் தெரிவித்ததைப் போன்றே நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பிலும் அரசாங்கமும் எதிரணிக் கட்சிகளும் உள்நாட்டு,வெளிநாட்டு ஊடக சுதந்திர அமைப்புகளும் சிவில் சமூக அமைப்புகளும் கண்டனங்களைத் தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றன. வழமைபோன்றே அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஊடக சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர்கள் வழமை போன்று உறுதியளிக்கத் தவறமாட்டார்கள். வழமை போன்றே ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதலுக்கு அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என்று எதிரணி குற்றஞ்சாட்டும் அதேவேளை, அரசாங்கமோ தனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக ஊடக நிறுவனங்கள் மீதும் ஊடகவியலாளர்கள் மீதும் சில சக்திகள் தாக்குதல்களை நடத்துகின்றன என்று கூறும்.
ஆனால், ஊடகவியலாளர்களைப் பொறுத்தவரை இத்தகைய கண்டனங்களும் குற்றச்சாட்டுகளும் பதிற்குற்றச்சாட்டுகளும் உறுதியளிப்புகளும் எந்தவிதமான பயனையும் தருமென்று நம்புவதற்கில்லை. ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் சக்திகள் சட்டத்தில் இருந்து விடுபாட்டுரிமை பெற்றவர்களாகச் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற தற்போதைய ஆபத்தான கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படாதவரை ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் குறித்து கடந்த மூன்றரை வருட காலத்தில் இலங்கைப் பத்திரிகைகளில் அடிக்கடி ஆசிரிய தலையங்கங்கள் எழுதப்பட்டதைப் போன்று சுதந்திர இலங்கையின் வரலாற்றில் முன்னர் எந்தவொரு காலகட்டத்திலுமே எழுதப்பட்டதில்லை.
இதுவரை இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் படுகொலை மற்றும் ஊடகத்துறையினர் மீதான தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு நேர்ந்த கதியை நோக்கும்போது போத்தல ஜயந்த மீதான தாக்குதலை மேற்கொண்டவர்கள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன்நிறுத்தப்படக் கூடிய சாத்தியம் குறித்து சந்தேகமே எழுகிறது. இலங்கையில் ஊடகத்துறை மிகவும் ஆபத்தான தொழிலாக மாறிவிட்டது என்று நாம் அடிக்கடி எழுதிவந்திருக்கிறோம். ஊடகவியலாளர்களுக்கான அச்சுறுத்தல்கள் தணிவதற்கான அறிகுறியைக் காணக்கூடியதாக இல்லை. உலகிலே ஊடகவியலாளர்கள் படுமோசமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் நாடுகளில் “முதன்மையானதாக’ கொலம்பியா கருதப்படுவதுண்டு. அந்தநாட்டுடன் இலங்கை அது விடயத்தில் போட்டிபோடுகிறதோ என்று கேட்கவேண்டியிருக்கிறது. போர் முடிவுக்கு வந்ததையடுத்து இலங்கை அமைதியான புதிய யுகத்துக்குள் பிரவேசிக்கிறது என்று கூறும் ஜனாதிபதியும் அரசாங்கமும் அந்த யுகத்தின் பயனை ஊடகவியலாளர்களும் அனுபவிக்கத்தக்கதாக அவர்களுக்கான ஆபத்துகளுக்கு முடிவைக் கட்ட முன்வரவேண்டும் என்பதே எமது வேண்டுகோளாகும். ஊடகவியலாளர் சமூகத்தின் உரிமைகளுக்காவும் நலன்களுக்காகவும் பாடுபடுவதைத் தனது பணியாகக்கொண்ட போத்தல ஜயந்த விரைவில் பூரண சுகமடையவேண்டும் என்பதே எமது வேண்டுதலாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply