வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்தால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும்

வடபகுதியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் அவர்கள் தங்கியுள்ள பகுதியில் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே, யாழ்.மாநகர சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுமென அதன் பொதுச் செயலாளர் ஹசன் அலி எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்குமான தேர்தலுக்கான வேட்பு மனு கோரப்பட்டுள்ளது. இந்நிலையில், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்கள் வாக்களிக்க வசதி செய்து கொடுக்கப்பட்டால் மாத்திரமே முஸ்லிம் காங்கிரஸ் இந்தத் தேர்தலில் போட்டியிடும்.

யாழ்ப்பாணத்தில் மட்டும் வாக்களிப்பு இடம்பெறுமாயின் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம் மக்கள் வாக்களிக்க முடியாமல் போய்விடும் என்பதாலேயே இம் முடிவினை மேற்கொண்டுள்ளோம்.

இதேவேளை, வவுனியா நகரசபையில் நாம் போட்டியிடவுள்ளோம். இதற்கான வேலைகளை எமது அமைப்பாளர்கள் மூலம் மேற்கொண்டு வருகின்றோம்.

தற்போது வடபகுதி மக்கள் பெருமளவில் இடம் பெயர்ந்துள்ள நிலையில், இந்த உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலையில்லை. எனவே இத்தேர்தலை காலம் தாழ்த்தி நடத்துமாறு நாம் கேட்கின்றோம்.

அங்கு இடம்பெயர்ந்துள்ள மக்கள் குழப்பத்தின் மத்தியில் உள்ளமையினால் தற்போது இத் தேர்தல் வரவேற்கக் கூடியதல்ல. முதலில் இடம் பெயர்ந்தவர்களை மீளக்குடியேற்றி அவர்களது அச்சத்தை போக்கிய பின்னர் தேர்தலை நடத்துவதன் மூலம் சுதந்திரமான தேர்தலை மேற்கொள்ளலாமென்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply