உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் வடக்கில் ஜனநாயகம் காலூன்றும்
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும் வவுனியா நகர சபைக்கும் தேர்தல் நடத்துவதென அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானம் ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்துள்ள சகலரினதும் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஜனநாயக செயற்பாட்டில் தேர்தல் முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஜனநாயகத்தின் அச்சாணி என்று தேர்தலைக் கூறலாம். கிராம நிர்வாக மட்டத்திலிருந்து தேசிய நிர்வாகம் வரை மக்களின் நேரடியான பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது ஜனநாயகத்தின் முக்கியமான கோட்பாடு. மக்கள் பங்குபற்றும் தேர்தல்களின் மூலமே இக்கோட்பாடு நடைமுறை வடிவம் பெறுகின்றது.
உள்ளூராட்சி சபையாக இருந்தாலென்ன, மாகாண சபையாக இருந்தாலென்ன, பாராளுமன்றமாக இருந்தாலென்ன உரிய காலத்தில் தேர்தல் நடைபெறா விட்டால் அராஜகம் கோலோச்சும் நிலை உருவாகும். இலங்கையின் அண்மைய வரலாற்றில் இதற்கு இரண்டு உதாரணங்களைக் கூறலாம்.
1977 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே. ஆர். ஜெயவர்தன முறைகேடான சர்வசன வாக்கெடுப்பின் மூலம் அப்பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்தார். தேர்தல் பின்போடப்பட்ட நிலையில் ஜே. ஆரின் ஆட்சி சர்வாதிகார வடிவத்தை எடுத்ததோடு அரசியல் களத்தில் அராஜகம் தலைதூக்கியது. அரசியலில் பாதாள உலகத்தின் தலையீடு இடம்பெறத் தொடங்கி யதும் நீதித்துறை கேவலப்படுத்தப்பட்டதும் இக்காலத்திலேயே.
வடக்கு, கிழக்கு மாகாண சபை செயற்பட முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கில் மாகாண சபைத் தேர்தலோ உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலோ நடைபெறவில்லை. இது புலிகளின் சர்வாதிகாரத்துக்கு வாய்ப்பான சூழ் நிலையைத் தோற்றுவித்தது. தங்கள் சர்வாதிகாரத் தர்பாரைத் தொடர்வதற்காக, தேர்தல்கள் நடக்காமலிருப்பதை உறுதிப் படுத்துவதில் புலிகள் கூடுதலாக சிரத்தை காட்டினார்கள். மக்களின் பிரதிநிதிகள் என்ற முத்திரையுடன் செயற்பட்ட மிதவாதத் தலைவர்களும் இவ்விடயத்தில் புலிகளுக்குச் சார்பாகவே நடந்தார்கள். மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்பதைக் காரணங் காட்டித் தேர்தலுக்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். ஆனால் பாராளுமன்றத் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தங்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்துக்கு அளித்த முக்கியத்துவத்தை இவர்கள் மக்களின் நலனுக்கு அளிக்கவில்லை.
மக்கள் இடம் பெயர்ந்திருக்கின்றார்கள் என்பதற்காகத் தேர்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நியாயமானதல்ல. இன்று தமிழ்ப் பகுதிகளில் ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் பலர் புலம்பெயர்ந்திருக்கின்றார்கள். அதனால் அப்பகுதிகளில் தேர்தலை நடத் தக் கூடாது எனக் கூறலாமா?
இப்போது தேர்தல் நடத்தப்படவுள்ள இரண்டு உள்ளூராட்சி சபை பிரதேசங்களிலுமிருந்து இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இங்கு தேர்தலை நடத்துவதற்கு இது தடையாக இருக்காது.
இவ்விரு சபைகளுக்குமான தேர்தலை இப்போது நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் என்னதான் காரணத்தை முன் வைத்தாலும் அரசாங்கம் அவற்றைப் பொருட்படுத்தாமல் தேர்தலை நடத்த வேண் டும். தங்களை நிர்வகிக்கும் அமைப்புகளைத் தாங்களே தெரிவு செய்வது மக்களுக்குள்ள அடிப்படை உரிமை. வட பகுதி மக்களுக்கு இந்த உரிமை நீண்ட காலமாக மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலை மேலும் தொடர்வதற்கு இடமளிக்கக் கூடாது. இரண்டு சபைகளினதும் தேர்தலைத் தொடர்ந்து மற்றைய உள்ளூராட்சி சபைகளுக்கும் உரிய முறையில் தேர்தலை நடத்த அரசாங்கம் முன்வர வேண்டும். அது வடக்கில் ஜனநாயகம் கல்லூன்றுவதற்கான ஆரம்பமாக அமையும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply