ஹாங்காங்கில் போராட்டத்துக்கு மத்தியில் உள்ளாட்சி தேர்தல்: விறு விறுப்பான ஓட்டுப்பதிவு

இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது. ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹாங்காங்கில் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹாங்காங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.

இந்த சூழலில்தான் கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி விசாரிக்க ஏதுவாக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மே மாதம் ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் ஹாங்காங்கை ஸ்தம்பிக்க வைத்ததால் சர்ச்சைக்குரிய மசோதாவை அரசு திரும்பப்பெற்றது.

ஆனால் தங்களின் போராட்டத்துக்கு அரசு அடிபணிந்ததை தங்களுக்கு சாதகமாக்கிக்கொண்ட போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடுவதற்கு கோரிக்கைகளை விரிவுபடுத்தி போராட்டத்தை தொடர்ந்தனர். அந்த வகையில் கடந்த 6 மாதங்களாக ஹாங்காங்கில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. வன்முறை சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் போராட்டம் மற்றும் வன்முறையால் நிலைகுலைந்துள்ள ஹாங்காங்கில் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

ஹாங்காங்கை பொறுத்தவரையில் மாவட்ட கவுன்சில்களுக்கு மிகக்குறைவான அதிகாரமே இருப்பதால் அந்த தேர்தலுக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது.

ஆனால் தற்போதைய உள்ளாட்சி தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகியிருக்கிறது. ஏனெனில் இந்த தேர்தல் ஹாங்காங்கின் நிர்வாக தலைவர் கேரி லாம் ஆதரவிற்கான ஒரு சோதனையாக கருதப்படுகிறது.

அதாவது 6 மாதங்களாக அரசு எதிர்ப்பு போராட்டம் நடந்து வரும் நிலையில் தற்போதைய அரசுக்கு மக்களிடம் எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை இந்த தேர்தல் காட்டும்.

ஹாங்காங்கின் 18 மாவட்டங்களில் உள்ள 452 மாவட்ட கவுன்சில் இடங்களுக்கு 1,090 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஹாங்காங்கின் ஒட்டு மொத்த மக்கள் தொகையான 70 லட்சத்து 40 ஆயிரம் பேரில் 40 லட்சத்து 10 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். இவர்கள் வாக்களிப்பதற்காக ஹாங்காங் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. உள்ளூர் நேரப்படி காலை 7.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.

போராட்டம் காரணமாக மக்கள் வாக்களிப்பதற்கு தயக்கம் காட்டுவார்கள் என்று கருதப்பட்ட நிலையில் அதற்கு நேர் மாறாக நடந்தது. காலை முதலே அனைத்து வாக்குச்சாவடிகளிலும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களின் ஜனநாயக கடமையை ஆற்றினர்.

இதனால் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலை விட தற்போதைய தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகின. மாலை 4.30 மணிக்கு 20 லட்சத்து 10 ஆயிரம் வாக்குகள் பதிவாகியிருந்தன. இது 2015-ம் ஆண்டில் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளை விட கூடுதலாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply