அதாவுல்லாவின் செயலுக்கு முஸ்லிம் தலைவர்களும் மன்னிப்பு கோர வேண்டும் : செல்வம் அடைக்கலநாதன்

இந்த நாட்டின் முதுகெலும்பான மலையக மக்களை கீழ்தரமான வார்த்தைகளால் கூறுமளவிற்கு அதாவுல்லாவுக்கு அதிகாரத்தினை வழங்கியவர்கள் யார் என வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் தனியார் ஊடகமொன்றில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அதாவுல்லா மலையக மக்களை கீழ்த்தரமான வார்த்தை பிரயோகத்தினை பயன்படுத்தி விழித்தமை தொடர்பாக கண்டனம் தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந் நாட்டின் முதுகெலும்பாக உழைக்கும் வர்க்கமாக சித்தரிக்கப்படுகின்ற மலையக மக்கள் நாட்டில் எங்கும் பரந்து வாழ்ந்து வருகின்றனர்.

இவர்கள் இன்று கல்விமான்களாகவும் புத்திஜீவிகளாகவும் பல அரச திணைக்களங்களில் உயர் அதிகாரிகளாவும் தீர்மானம் எடுக்கும் நிர்வாகிகளாகவும் மிளிர்ந்துவரும் நிலையில் அவர்களை கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டு தாக்குவது ஏற்புடையதல்ல.

தனது சமூகத்தையும் அவர்களின் விடயங்களையும் தனது அரசியல் ரீதியான பயணத்தில் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய அதாவுல்லா இன்று மலையக மக்களை சீண்டிப்பார்த்து அதனூடாக அரசியல் நடத்த கீழ்த்தரமான செயற்பாட்டை முன்னெடுத்துள்ளமை கண்டிக்கத்தக்கது.

வெறும் இனவாதியாக தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வரும் அதாவுல்லா தமிழ் பேசும் வடக்கு கிழக்கு மற்றும் மலையக வாழ் மக்கள் மீது அக்கறை இருப்பதாக வெளிப்படுத்தி தன்னை நல்லவராகவும் வல்லவராகவும் நிரூபிக்க முனைந்து இன்று தனது ஆழ் மனத்தில் பதிந்துள்ள கீழ்த்தரமான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

வெறுமனே அரசியல் பிழைப்புக்காக மற்றுமொரு சமூகத்தினை கீழ்தரமான வார்த்தைகளால் விழித்த அதாவுல்லா பகிரங்க மன்னிப்பை மலைகத்தமிழர்களிடம் கோரவேண்டும் என்பது மட்டுமல்லாது முஸ்லீம் தலைவர்களும் அவரது செயலுக்கு மன்னிப்பு கோரவேண்டும் என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply