இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்கும்
சர்வதேச நாணயநிதியத்தின் கடனுதவி விரைவில் இலங்கைக்குக் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். உலகப் பொருளாதார நெடிக்கடியால் இலங்கையின் ஏற்றுமதி வர்த்தகத்துக்கு ஏற்பட்ட பாதிப்பை நிவர்த்தி செய்வதற்கு இலங்கை அரசாங்கம் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை, சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தது.
எனினும், புலிகளுக்கு எதிராக அரசாங்கம் முன்னெடுத்த மோதல்களில் மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாகக் கூறி சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி வழங்கப்படக்கூடாது என சில மேற்கு உலக நாடுகள் கூறியிருந்தன.
இந்த நிலையிலேயே இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தமக்குக் கிடைக்கும் என அமைச்சர் பீரிஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை தொடர்பான முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரித்திருக்கும் அமைச்சர், மனிதாபிமான இராணுவ நடவடிக்கையின் போது பொதுமக்கள் தங்கியிருந்த பகுதிகள் மீது கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி இராணுவத்தினர் தாக்குதல்களை நடத்தவில்லையெனக் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியை அரசியல் நடவடிக்கையாகக் கருதவில்லையெனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2009ஆம் ஆண்டு ஆரம்பத்தில் 4.5 வீதமாக வளர்ச்சி கண்டிருப்பதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இதனைக் கருத்தில் கொண்டு சர்வதேச நாணயநிதியத்தின் பணிப்பாளர்கள் இலங்கையின் கடன் கோரிக்கையைச் சாதகமாகப் பரிசீலிப்பார்கள் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply