லண்டன் பாலத்தில் 2 பேரை கத்தியால் குத்தி கொன்றவர், பாகிஸ்தான் பயங்கரவாதி
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் தேம்ஸ் நதியின் மீது கட்டப்பட்டுள்ள பாலம், லண்டன் பாலம் என அழைக்கப்படுகிறது. நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) உள்ளூர் நேரப்படி மதியம் 1.58 மணிக்கு இந்த பாலத்துக்கு அருகே பொதுமக்கள் மீது சிலர் கத்தியால் சரமாரியாக குத்தி காயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
நேற்று இதுபற்றிய கூடுதல் தகவல்கள் வெளியாகின. அதாவது, லண்டன் பாலத்தின் வடக்கு முனையில் உள்ள பிஷ்மாங்கர் அரங்கில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் கைதிகள் மறுவாழ்வு தொடர்பான மாநாடு நடைபெற்றுக்கொண்டி ருந்தது. இதில் ஏராளமான மாணவர்களும், முன்னாள் கைதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த மாநாட்டு அரங்குக்குள் ஒரு மர்ம நபர் கத்தியால் குத்தி விட்டு, வெளியே ஓடிவந்து பாலத்தின் அருகே சென்று கொண்டிருந்த அப்பாவி மக்கள் மீதும் குத்தினார். அதைக் கண்ட பொதுமக்கள் பதற்றத்தில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள நாலாபுறமும் ஓட்டம் எடுத்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் கத்திக்குத்து நடத்திக்கொண்டிருந்த நபரை சுட்டுக்கொன்றனர்.
அவரது தாக்குதலில் படுகாயம் அடைந்தவர்களை அங்கிருந்து மீட்பு படையினர் மீட்டு ஆம்புலன்சுகளில் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் ஆண், மற்றவர் பெண் ஆவார். 3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் ஆண், 2 பேர் பெண்கள்.
இந்த சம்பவத்தை தொ டர்ந்து, அந்த பகுதி லண்டன் மாநகர போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. லண்டன் பால பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர கண்காணிப்பு, ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
அந்த பகுதியை தவிர்க்குமாறு பொதுமக்களை மாநகர போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். விசாரணைக்கு உதவும் தகவல்களை வழங்குமாறும் பொதுமக்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதற்கிடையே லண்டன் பால தாக்குதலை நடத்தியவர் உஸ்மான்கான் (வயது 28) என்றும், அவர் போலீஸ் அதிகாரிகளுடனான மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டு விட்டார் என்றும் லண்டன் மாநகர போலீஸ் உதவி கமிஷனர் நீல் பாசு உறுதிசெய்தார்.
உஸ்மான்கானின் பூர்வீகம் பாகிஸ்தான். ஆனால் அவர் பிறந்தது, லண்டன். ஸ்டாபோர்டுஷயர் பகுதியில் வசித்து வந்துள்ளார். இவர் 2012-ம் ஆண்டு, பயங்கரவாத குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர், சிறையில் இருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்று நீல் பாசு குறிப்பிட்டார். பிஷ்மாங்கர் அரங்கில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடந்த கைதிகள் மறுவாழ்வு தொடர்பான மாநாட்டில் உஸ்மான்கான் கலந்து கொண்டுள்ளார்.
இவர் பாகிஸ்தானில் உள்ள தாயார் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அங்கு சென்று சில காலம் தாயாருடன் வசித்து விட்டு மீண்டும் லண்டனுக்கு திரும்பி உள்ளார்.
லண்டனுக்கு திரும்பியபின்னர் இணையதளம் மூலமாக பயங்கரவாதத்தை போதனை செய்து வந்துள்ளார். இப்போது அவர் கத்தியால் குத்தி நடத்தியது, பயங்கரவாத தாக்குதல்தான் என உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் தாக்குதலின் நோக்கம் என்ன என்பது உடனடியாக தெரியவரவில்லை.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், தொடர்புடைய அனைவரும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் என்றும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி உள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply