பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மு‌‌ஷரப் மருத்துவமனையில் அனுமதி

பாகிஸ்தானில் கடந்த 2001 முதல் 2008-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் பர்வேஸ் மு‌‌ஷரப் (வயது 76). இவர் கடந்த 2007-ம் ஆண்டு நாட்டில் அவசர நிலையை கொண்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக, நாட்டின் அரசமைப்பு சட்டத்தை அவர் முடக்கிவைத்தார். இது பெரும் எதிர்ப்புக்கு வழி வகுத்தது.

இது தொடர்பாக கடந்த 2013-ம் ஆண்டில் மு‌‌ஷரப் மீது தேசத்துரோக வழக்கு தொடரப்பட்டது. ஆனால் 2016-ம் ஆண்டு, மார்ச் மாதம் மருத்துவ சிகிச்சை பெறப்போவதாக கூறி மு‌‌ஷரப் துபாய்க்கு சென்றார். பின்னர் அவர் நாடு திரும்பவே இல்லை.

இந்த நிலையில், சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்த மு‌‌ஷரப் மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பை வரும் 28-ந்தேதி வெளியிடுவதாக அந்த கோர்ட்டு அறிவித்தது.

இதனை எதிர்த்து, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, மு‌‌ஷரப் மீதான தேசத் துரோக வழக்கின் தீர்ப்பை தற்போது நிறுத்தி வைத்துள்ளது.

இந்த நிலையில் மு‌‌ஷரப்புக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, நேற்று முன்தினம் அவர் துபாயில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருதய பிரச்சினை மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டதாக அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தேசத்துரோக வழக்கில் மு‌‌ஷரப் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மரண தண்டனை அல்லது வாழ்நாள் சிறை விதிக்க முடியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply