வடக்கு தேர்தல்களில் தமிழ் கட்சிகள், பொதுசன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது பயனுள்ளது!
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கும், வவுனியா நகரசபைக்கும் நடைபெறவுள்ள தேர்தலுக்கான, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலை சிறிது காலத்திற்காவது ஒத்திவைக்கும்படி, வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான மூன்று கட்சிகள் கொண்ட ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணி விடுத்த கோரிக்கையை அரசாங்கம் காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. எனவே தேர்தல் நடப்பது நிச்சயமாகிவிட்டது.
தேர்தலில் ஜனநாயக தமிழ் அரசியல் கட்சிகளை ஓரணியில் போட்டியிட வைப்பதற்கு, புலம்பெயர் தமிழர்கள் சிலர் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியீட்டியதாகத் தெரியவில்லை. பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து, அதன் வெற்றிலை சின்னத்தில் போட்டியிடுமாறு, இந்தக் கட்சிகளுக்கும், ஈ.பி.டி.பிக்கும் அரசாங்கம் விடுத்த அழைப்பையும் அக்கட்சிகள் நிராகரித்துவிட்டன. அதாவது, இந்தக்கட்சிகள் தமக்குள் ஐக்கியப்பட்டு செயற்படவும் தயாரில்லை. அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவும் தயாரில்லை. இதுவரை காலமும் செயல்பட்டது போல, தமிழ் தேசியவாத அடிப்படையில், தனித்தனிக் ‘குடில்கள்’ வைத்துக்கொண்டு இருக்கவே, அவை விரும்புவதாகத் தெரிகிறது. அவ்வாறு முடிவு செய்வதற்கு ஜனநாயக ரீதியாக அவைக்கு பூரண உரிமை உண்டு என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஆனால், தற்பொழுது தமிழ் மக்கள் உள்ள நிலையைப் பார்க்கும் போது சில கருத்துகளை முன்வைப்பது அவசியமானது. சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து செயற்பட்ட அத்தனை தமிழ் தலைமைகளும், இலங்கையின் தேசிய நீரோட்டத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாட்டிலேயே செயற்பட்டு வந்துள்ளன. இலங்கையின் ஏனைய இன மக்கள் சுதந்திர இலங்கையை தமது தாய்நாடாக கொண்டாடிய அதேவேளையில், தமிழ் தலைமைகளோ, ‘இந்தியா தாய்நாடு’, ‘பிரித்தானியா பூட்டிநாடு’ என்ற தோரணையிலேயே செயற்பட்டு வந்துள்ளன. இதனால் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் நிலைமைகள் நழுவிச் சென்றதுடன், வடக்குக் கிழக்கு தமிழ்ப் பிரதேசங்களில் பொருளாதார அபிவிருத்தியும் கூட நடைபெறவில்லை. தமிழ் தலைமைகளின் இந்த தேசிய எதிர்ப்பு அரசியலின் உச்சகட்டமாக, பாசிச புலிகள் இயக்கம் உருவாகி, தமிழ் மக்களுக்கு வரலாறு காணாத இழப்புகள் ஏற்பட்டது தான் மிச்சம்.
தமிழ் மக்களின் ஜனநாயக வாழ்வை முற்றாக முடமாக்கிய புலிகளைத் தோற்கடித்து, தமிழ் மக்களை விடுவிப்பதில், அரசுடன் இணைந்து செயற்பட்டு வரும் ஈ.பி.டி.பி கட்சியாலோ, அல்லது அரசுடன் இணையாதுவிட்டாலும், அரச பாதுகாப்பில் தங்கி இருந்துவந்த ஜனநாயக தமிழ் தேசியக்கூட்டணிக் கட்சிகளாலோ, எவ்வித பங்களிப்பும் செய்ய முடியாமல் போய்விட்டது. அது அவர்களின் பலவீனம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. அதேவேளையில், புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற கிழக்கு மாகாண தலைவர்களான கருணா, பிள்ளையான் தலைமையிலான அணியினர், புலிகளைத் தோற்கடிப்பதில் முக்கியமான பங்களிப்பை அரசுக்கு வழங்கியிருந்தனர். அதுமட்டுமல்லாமல், அரசுடன் சேர்ந்து அவர்கள் உருவாக்கிய புலிகள் அற்ற ஜனநாயகச் சூழலில், அவர்கள் ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ என்ற தனி கட்சியை உருவாக்கி, கிழக்கு மாகாணசபை தேர்தலிலும், அங்குள்ள உள்ளூராட்சி தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றியும் பெற்றனர். இப்பொழுது அவர்களின் முக்கிய தலைவரான கருணா (விநாயகமூர்த்தி முரளிதரன்) சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து, அதன் உப தலைவராகி, அமைச்சராகவும் ஆகியுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சராக உள்ள பிள்ளையானும் (சிவநேசதுரை சந்திரகாந்தன்), அவர்களது கட்சியைச் சேர்ந்த மட்டுநகர் முதல்வரும் கூட, சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து செயற்படவுள்ளதாகத் தெரிய வருகிறது.
கருணா, பிள்ளையான் அணியினரின் இந்த முடிவை, தமிழ் தேசியவாதிகளின் ஒரு பிரிவினர் வழமையான பாணியில், அவர்கள் தமிழினத்திற்கு செய்யும் ‘துரோகம்’ எனக் கூறலாம். ஆனால் தமிழினம் – அதுவும் கிழக்கு தமிழ்மக்கள் இன்று இருக்கும் நிலையில், அவர்கள் எடுத்த முடிவு காலோசிதமான முடிவு என்பதில் சந்தேகம் இல்லை. யுத்தத்தால் சீரழிந்து போன கிழக்கு தமிழ் மக்களது வாழ்க்கையை எப்படியாவது சீரமைப்பது தான், அவர்களது உடனடிப் பணியாக இருக்க முடியும். இப்பொழுது புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டது. இனிமேல் எமக்கு முன்னால் உள்ளது, இனமோதல்கள் அற்ற, பொருளாதார சுபீட்சம் நிறைந்த சுதந்திரமான, ஐக்கியமான இலங்கையை ஒன்றைக் கட்டியெழுப்புவதே.
அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு, அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு நீதியான தீர்வைக் காணவுள்ளதாக, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெளிவாகவும், உறுதியாகவும் கூறியுள்ளார். அத்துடன் அரசாங்கம் யுத்தத்தால் சீரழிந்து போன தமிழ் பிரதேசங்களின் பொருளாதாரத்தை, காலத்தின் தேவைக்கேற்ப மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இவையிரண்டும் மிக முக்கியமான, அத்தியாவசியமான உடனடிப் பணிகளாகும்.
இந்த சூழ்நிலையில், அனைத்து தமிழ் ஜனநாயக சக்திகளினதும் தலையாய பணி, அரசின் இந்த முயற்சிகளுக்கு கைகொடுத்து ஒத்துழைப்பதாகும். அதைவிடுத்து, வழமையான பாணியில் தமிழ் ’தேசிய’வாதத்தை கிளறிவிட்டு, இலங்கை அரசு எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்க ஆரம்பித்தால், தமிழ்மக்கள் மீண்டும் இருள் சூழ்ந்த ஒரு வாழ்க்கைக்குள் தான் தள்ளப்படுவர். தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவை இனப்பிரச்சினைக்கு நீதியான தீர்வும், பொருளாதார அபிவிருத்தியும், நிம்மதியான வாழ்வும் தான். அதனை இலங்கை அரசு எதிர்ப்பு அரசியலால் ஒருபோதும் அடையமுடியாது என்பதை நாம், கடந்த காலத்தில் பெருமளவு இரத்தம் சிந்திப்பெற்ற அனுபவம், தெளிவுற நிரூபித்துவிட்டது. அரசுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே, தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்யமுடியும் என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது. அதையே, கருணா – பிள்ளையான் தலைமையிலான கிழக்கு மாகாண தலைமை புத்திசாதுரியத்துடன் செய்துள்ளது.
வடக்கிலும் அதையே ஜனநாயக தமிழ் அரசியல் கட்சிகள் செய்ய முன்வர வேண்டும். தனித்தனிக் கட்சிகளாக பிளவுபட்டு நின்று, தமிழ் மக்களின் பலத்தையும், கோரிக்கைகளையும் பலவீனப்படுத்துவதை விடுத்து, அரசுடன் இணைந்து நின்று செயற்பட்டு, தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். சிலருக்கு ‘சிறீலங்கா சுதந்திரக்கட்சியில் இணைவதா?’ என்ற ‘கற்பு’ எண்ணம் ஏற்படக்கூடும்! இந்த சிறீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கம் தான், உங்களில் பலரின் உயிர்களைப் பாதுகாத்ததுடன், புலிகளை அழித்து, நீங்கள் அச்சமின்றி தமிழ் பகுதிகளில் அரசியல் வேலைசெய்யக்கூடிய ஒரு சூழலையும் உருவாக்கித் தந்தது என்பதை, நீங்கள் நினைவில் கொள்வது அவசியம். அதற்காக நீங்கள் சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைய வேண்டும் என யாரும் பலவந்தப்படுத்த முடியாது. பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைவதால் சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைவதாக கருதவேண்டிய அவசியமில்லை. இன்றைய காலகட்டத்தில், தமிழ் மக்களின் நலன் கருதி, நீங்கள் இந்த நல்ல முடிவை எடுப்பது அவசியம்.
ஜனநாயக தமிழ் அரசியல் கட்சிகள், சிறீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இரண்டறக் கலக்க வேண்டும் என்பது கூட இல்லை. இன்றைய இலங்கை அரசு என்பது ஒரு ஐக்கிய முன்னணி அரசாகும். அதில் சிறீலங்கா சுதந்திரக்கட்சி முக்கிய பங்கு வகித்தாலும், லங்கா சமசமாஜக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் ஐக்கிய முன்னணி, சிறீலங்கா மக்கள் கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி என பல வித்தியாசமான கருத்துகளைக் கொண்ட கட்சிகள், பொதுசன ஐக்கிய முன்னணி என்ற குடையின் கீழ் இணைந்திருக்கின்றன. அவ்வாறு தமிழ் கட்சிகளும் இணைந்து செயல்பட முடியும்.
அரசுடனான ஐக்கியப்பாட்டின் ஒரு பரீட்சார்த்தமாக, வரப்போகின்ற யாழ் மற்றும் வவுனியா உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் பொதுசன ஐக்கிய முன்னணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்றால், இருசபைகளின் மூலமும் அரசின் உதவியுடன் மாபெரும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அத்துடன் இனப்பிரச்சினை தீர்வு விடயத்திலும், தென்னிலங்கை கட்சிகளின் சிநேகபூர்வமான தொடர்புகள் மூலம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க முடியும். 60 வருடங்களாக தமிழ் கட்சிகள் பின்பற்றி வந்த தேசிய விரோத, எதிர்ப்பு அரசியல் சகல பரிமாணங்களிலும் தோல்வியடைந்துவிட்ட நிலையில், இனிமேலாவது ஒரு புதிய அரசியல் வழியில் பயணிப்பது காலத்தின் தேவையாகும்.
தமிழ் அரசியல் கட்சிகள் கட்சிகள் அவ்வாறு செயல்படுமா என்பதே இப்பொழுது உள்ள கேள்வியாகும்.
– வி.சின்னத்தம்பி (யாழ்ப்பாணம்) – தேனீ இணையம்
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply