20 வருடங்களின் பின்னர் தாண்டிக்குளம் வரை செல்கிறது யாழ் தேவி

20 வருடங்களின் பின்னர் யாழ் தேவி புகையிரதம் முதற் தடவையாக நாளை சனிக்கிழமை தாண்டிக்குளம் வரை பயணிக்கவுள்ளது. நாளை காலை புறக் கோட்டையிலிருந்து புறப்படும் யாழ் தேவி புகையிரதம் தாண்டிக்குளம் வரை செல்லுமென போக்கு வரத்துத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.  யாழ் குடா நாட்டுக்கான புகையிரதசேவை ஆரம்பிக்கப்படுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையே தாண்டிக்குளம் வரையிலான முதற்கட்ட சேவையென அமைச்சர் சுட்டிக்காட்டிள்ளார்.

“வவுனியாவுக்கு அப்பாலுள்ள புகையிரதப் பாதைகள் விடுதலைப் புலிகளால் முற்றாக அழிக்கப்பட்டன. அண்மைக்காலமாகப் பாதுகாப்புக் காரணங்களுக்காக யாழ் தேவி புகையிரதம் மதவாச்சிவரையே பயணித்தது” என அமைச்சர் குறிப்பிட்டார்.

‘வடக்கின் வசந்தம்’ செயற்திட்டத்தின் கீழ் 14 பில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வடபகுதிக்கான புகையிரதப் பாதையமைக்கும் திட்டம் 2010ஆம் ஆண்டில் முடிவடையும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார். அதேநேரம், ஓமந்தை புகையிரத நிலையத்திற்கான அடிக்கல்நாட்டு விழா நாளை போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும தலைமையில் நடைபெறவுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்துக்கும், கண்டிக்கும் இடையிலான ஏ-9 வீதியின் புனரமைப்புப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளபோதும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிக்குக் காத்திருப்பதாக பெருந்தெருக்கள் அமைச்சர் கூறியிருந்தார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் ஏ-9 வீதி பொதுமக்கள் பாவனைக்காகத் திறந்துவிடப்படும் எனக் குறிப்பிட்ட அமைச்சர், எனினும் தற்பொழுது ஏ-9 வீதியூடாக இராணுவத்தினருக்கான பொருள்களும், குடாநாட்டுக்கான அத்தியாவசியப் பொருள்களும் பரிமாற்றப்படுவதாகக் கூறினார்.

யாழ் குடாநாட்டுக்கான மன்னார்-பூநகரி ஊடாக ஏ-32 பாதையின் புனரமைப்புப் பணிகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply