ஒரு ஆண்டாக சி.பி.ஐ. அதிகாரிகளாக வலம் வந்த சமையல் மாஸ்டர்கள்

வேலூர் காட்பாடி விருதம்பட்டை சேர்ந்த மைதீன் (43), ஹரிகரன் (24) போலி சி.பி.ஐ. அதிகாரிகளாக வலம் வந்தனர்.காட்பாடி கழிஞ்சூரை சேர்ந்த கிருபாகரன். மோட்டார் சைக்கிளில் அங்குள்ள மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது போலீஸ் உடையில் டிப்-டாப்பாக வந்த மைதீன், ஹரிகரன் அவரை மடக்கினர். தாங்கள் சி.பி.ஐ. இன்ஸ்பெக்டர் என கூறி அடையாள அட்டையை காண்பித்தனர். இதனால் சந்தேகமடைந்த கிருபாகரன் விருதம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மைதீன், ஹரிகரன் பிடிபட்டனர்.

அவர்கள் இருந்த வீட்டில் போலீஸ் யூனிபார்ம், போலி அடையாள அட்டைகளை கைப்பற்றினர். மேலும் வீட்டில் இருந்து ரூ.4.70 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மோசடி செய்த பணமா என விசாரணை நடத்தினர். இந்த பணத்துக்கு அவர்கள் கணக்கு காட்டியுள்ளனர். இதையடுத்து பணம் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களது சீருடையில் துப்பாக்கி வைக்கக்கூடிய பவுச் இருந்தது. இதனால் அவர்கள் துப்பாக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் வீடு முழுவதும் தேடினர். எதுவும் சிக்கவில்லை.

மேலும் விசாரணையில் மைதீன் சமையல் தொழில் செய்து வந்ததும், ஹரிகரன் அவருக்கு உதவியாளராக இருந்து வந்ததும் தெரியவந்தது. பணம் பறிக்கும் ஆசையில் போலீஸ் சீருடை வாங்கி போலி அடையாள அட்டை தயாரித்து ஏமாற்றியுள்ளனர்.

இவர்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு போலீஸ் சீருடையில் இருந்த போட்டோவுடன் பேஸ்புக் முகவரி வைத்துள்ளனர். இதன்மூலம் பலரை ஏமாற்றியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விருதம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மைதீன், ஹரிகரன் இருவரும் பைக்கில் வந்துள்ளனர். அவர்களிடம் ஆவணங்களை கேட்டபோது தாங்கள் சி.பி.ஐ. அதிகாரிகள் என கூறி போலி அடையாள அட்டையை காட்டி சென்றுள்ளனர்.

அவர்கள் பிடிபட்ட பிறகு தான் போலீசாரையே ஏமாற்றி சென்றது தெரியவந்துள்ளது.

அவர்கள் போலீசாரிடம் கூறுகையில் சிறுவயதிலிருந்தே போலீஸ் சேர வேண்டும் என ஆசை நடிகர் சூர்யா நடித்த சிங்கம் படத்தை பார்த்த பிறகு சூர்யா போலவே இருக்க வேண்டும் என்று நினைத்தோம். இதையடுத்து போலீஸ் சீருடை அணிந்து செல்பி, போட்டோ எடுத்துக் கொண்டோம். பண ஆசையில் மோசடி செய்ய முயன்றோம் என தெரிவித்துள்ளனர்.

2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். ஓராண்டுக்கு மேலாக போலி சி.பி.ஐ. ஆக வலம் வந்தது தெரியவந்தது. அவர்களிடம் ஏமாந்தவர்கள் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply