“வணங்கா மண்” தொடர்ந்தும் தடுத்துவைப்பு: கடற்படையினர் தீவிர விசாரணை
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்த “வணங்கா மண்” சரக்குக் கப்பல் பாணந்துறை கடற்பரப்பினுள் தடுத்து நிறுத்தப்பட்டு கடற்படையினரின் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது என கடற்படையின் பேச்சாளர் கப்டன் டி. கே. பி. தஸநாயக்க தெரிவித்தார். கொழும்பிலிருந்து சுமார் 87 கடல் மைல் தொலைவில் நேற்றுமுன்தினம் அதிகாலை 4.00 மணியளவில் கைப்பற்றப்பட்ட எம். வி. கப்டன் அலி சரக்குக் கப்பல் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றுக்கொண்டுவந்துள்ளதாக கூறியே இக் கப்பல் இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்துள்ளது. எனினும் இன்னொரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்வதாயின் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் எதனையும் பின்பற்றாமல் எதுவித முன்னறிவித்தலும் இன்றி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்தமைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் தெரிவிக்கிறது. கடற்படையின் விசாரணைகள் இன்னும் முடியவில்லை. முடிந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகத்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
பாணந்துறை கடல் பகுதிக்கு கொண்டுவரப்பட்ட இக் கப்பலில் மருந்துப் பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், அத்தியாவசிய பொருட்கள் அடங்கலாக சுமார் 884 மெற்றிக் தொன் பொருட்கள் இருப்பதாகவும் கடற்படையினர் தெரிவிக்கின்றனர். ஒரு ஐஸ்லாந்து பிரஜையும், ஒரு ஆங்கிலேய பிரஜையும் இரண்டு எகிப்திய பிரஜைகளும். 11 சிரிய பிரஜைகளும் உட்பட 15 மாலுமிகள் இருந்தனர். கப்பலின் கப்டனும் சிரிய பிரஜையென கடற்படை அறிவிக்கிறது.
சுமார் 93 மீற்றர் நீளமும், 14 மீற்றர் அகலமும் கொண்டதான சரக்குக்கப்பல் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை கடற்பரப்பிலேயே தடுத்துவைக்கப்பட்டுள்ளது. கப்பல் தொடர்பாக கடற்படையினரின் விசாரணைகள் யாவும் பூர்த்தியானதுமே மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என இலங்கை வெளிநாட்டமைச்சின் செயலாளர் கலாநிதி பாலித்த கொஹன தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply