இயேசு கிறிஸ்து பிறந்த பெத்லகேம் நகரில் இன்று கோலாகல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கிறிஸ்துமஸ் திருநாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த பெத்லகேம் நகரம் தற்போது இஸ்ரேல் நாட்டுக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது.
இயேசு கிறிஸ்து பிறந்த மாட்டுத் தொழுவம் அமைந்திருந்த இடத்தின் அருகாமையில் மிகப்பழமையான ஒரு தேவாலயம் அமைந்துள்ளது.
கி.பி.325-326 ஆண்டுவாக்கில் கட்டப்பட்ட இந்த ஆலயம் 330-333-ம் ஆண்டுக்கிடையில் புதுப்பிக்கப்பட்டு 31-5-339 அன்று திறந்து வைக்கப்பட்டது.ஐந்தாம் நூற்றாண்டு காலத்தில் சமார்ட்டியர்கள் கலவரத்தின்போது இந்த ஆலயம் தீயிட்டு எரிக்கப்பட்டு பின்னர் மீண்டும் 12 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டது.
’யுனெஸ்க்கோ’ நிறுவனத்தால் உலகின் பழங்கால நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த தேவாலயத்தை தரிசிக்கவும், இங்கு பிரார்த்தனை செய்யவும் ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
அவ்வகையில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மிகவும் மூத்த தலைமை மதகுருவான ஆர்ச்பிஷப் பியர்பட்டிஸ்ட்ட பிஸ்ஸபல்லா தலைமையில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான டிசம்பர் 25-ம் தேதியான இன்று இஸ்ரேல் நாட்டில் உள்ள மக்களும், வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் இன்று இந்த ’நேட்டிவிட்டி’ தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தின சிறப்பு ஆராதானை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, துதி பாடல்களைப் பாடி, மனமுருகிப் பிரார்த்தனை செய்தனர்.
பாலஸ்தீனம் நாட்டின் அதிபர் மஹ்மூத் அப்பாஸ் இதில் பங்கேற்றார்.
நள்ளிரவு சரியாக 12 மணிக்கு பெத்லகேம் நகரம் முழுவதும் மணியோசை ஒலித்தது. தேவாலயத்தின் வாசலில் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்த 15 மீட்டர் உயரமுள்ள கிறிஸ்துமஸ் மரத்தின் முன்னால் சிலர் குழுவாக நின்று ‘செல்பி’ எடுத்து மகிழ்ந்தனர்.
’இது கிறிஸ்துவின் நிலம், அமைதியின் பூமி. இங்கு நிற்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த புனிதபூமி இயேசு கிறிஸ்து பிறந்த இடம் மற்றும் சிலுவையில் அறையப்பட்ட இடம் மட்டுமின்றி அவர் மரணத்துக்கு பின்னர் உயிர்த்தெழுந்த இடமாகும்.’ என்று ஒரு வெளிநாட்டு பயணி புல்லரிப்புடன் கூறினார்.
முன்னதாக நேற்று, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பெத்லகேம் நகரம் முழுவதும் வண்ணவண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குடியிருப்பு பகுதிகளில் உள்ள தெருக்களில் புத்தாடை உடுத்திய சிறுவர்-சிறுமியர் வானவேடிக்கைகளை கண்டு களித்தனர்.
உறவினர்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி, கேக்களை பரிமாறி உற்சாகமாக காணப்பட்டனர்.
இதேபோல், அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகள் மற்றும் ஆப்பிரிக்கா, ஆசியா உள்ளிட்ட கண்டங்களில் உள்ள நாடுகளிலும், வளைகுடா நாடுகளிலும் இன்று கிறிஸ்துமஸ் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மாலை மலர் டாட்காமின் சார்பில் உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ சகோதர-சகோதரிகளுக்கு ‘இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்’.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply