குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு : அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் பேரணி

நாடு முழுவதும், மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.  நாட்டின் தலைநகர் டெல்லியில் கல்லூரி மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர், பல பகுதிகளில் தீவிர போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் வன்முறை சம்பவங்களும் அரங்கேறின.

உத்தரபிரதேசத்தில் லக்னோ, அலிகார் பகுதிகளில் நடந்து வந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது.  இதில் பல இடங்களில் கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்தும், போலீசார் மீது கற்களை வீசியும் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கலைத்தனர். சில இடங்களில் ரப்பர் குண்டுகள் மூலம் போலீசார் சுட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்புக்கு எதிராக பீகார் மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியான ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்திலும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடைபெற்றது.  இந்நிலையில் இந்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களின் தீவிரம் குறைந்து அமைதி திரும்பியது.

இதன்பின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா சார்பில் ஊர்வலங்கள் நடத்தப்பட்டன.  இதேபோன்று மராட்டியத்தின் நாக்பூர் நகரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக லோக் அதிகார் மஞ்ச், பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற அமைப்புகள் பேரணியாக சென்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் ஆஸ்டின், ராலே மற்றும் சியாட்டில் ஆகிய பகுதிகளில் இந்திய வம்சாவளியினர் பேரணியாக சென்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.  அவர்கள் இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளின் கொடிகளை ஏந்தியபடியும், ஆதரவு அட்டைகளுடன் கோஷங்கள் எழுப்பியபடியும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply