ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்துள்ளது. 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் அவருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த நீதிமன்றம் அவருடைய கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.மேலும் வைத்தியசாலையில் சிகிச்சைகள் பெற்று வெளியேறியதன் பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளை வேன் கடத்தல் தொடர்பான ஊடக சந்திப்பு ஒன்றை நடத்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டமைக்காக ராஜித சேனாரத்னவை கைது செய்ய பிடியாணை ஒன்றை பிறப்பிக்குமாறு சட்டமா அதிபர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கமைய கடந்த 24 ஆம் திகதி குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் அதற்கான அனுமதியை வழங்குமாறு கோரியிருந்தனர்.
அந்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் முன்னாள் அமைச்சரை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பித்தது.
இந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி ராஜித்த சேனாரத்ன லங்கா தனியார் வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இவ்வாறு சிகிச்சை பெற்ற வந்த அவரை கடந்த 27 ஆம் திகதி பிற்பகல் 2.30 அளவில் குற்ற புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில் ராஜித்த சேனாரத்னவிற்கு பிணை வழங்கினால் அது அவர் தொடர்பான விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
அதனால் அவரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடுமாறு அவர்கள் நீதிமன்றத்தை கோரினர்.
அதற்கமைய அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதிபதி சலனி பெரேரா உத்தரவிட்டார்.
இதேவேளை கடந்த 28 ஆம் திகதி சிறைச்சாலை வைத்தியர்கள் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை பரிசோதித்தனர்.
அதற்கமைய அவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அல்லது தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க முடியும் என அவர்கள் பரிந்துரைத்தனர்.
எனினும் நேற்று மாலை முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உடல் நிலை பாதிப்படைந்தது.
இதனால் அவர் லங்கா தனியார் வைத்தியசாலையின் அதிசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இதனால் அவரை சிறைச்சாலை வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்ல லங்கா தனியார் வைத்தியசாலைக்கு வருகைதந்திருந்த நோய்காவு வண்டியும் அவர் இல்லாமல் சென்றது.
இந்த நிலையில் கடந்த 23 ஆம் திகதி முன்னாள் அமைச்சரின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த மனு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply