ஜனநாயக அரசியலில் ஈடுபடுவோருக்குப் பாதுகாப்பு தேவை : கைலேஸ்
ஆயுதங்களைக் களைந்து விட்டு முழுமையான ஜனநாயக அரசியலில் ஈடுபட்டுள்ள தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மட்டக்களப்பு காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் உறுப்பினரான அறவன் என அழைக்கப்படும் இராமலிங்கம் ஜெயக்குமார் மட்டக்களப்பு புதுநகர் பகுதியில் வைத்து நேற்று முன்தினம் (ஜூன் 4)இரவு `இனந்தெரியாத` ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் தமது கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைக் கலாசாரத்தை கைவிட்டு ஜனநாயக அரசியல் செயற்பாடுகளில் முழுநம்பிக்கை கொண்டு மக்களுக்கு சேவையாற்ற வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
எதிர்காலத்தில் இவ்வாறான படுகொலைச் சம்பவங்கள் நாட்டின் எப்பாகத்திலும் இடம் பெறக்கூடாது என்பதே சகல மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.
கட்சியின் உறுப்பினர்கள் மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற இருக்கும் நிலையில், அவர்கள் மிகவும் ஈனத்தனமாக படுகொலை செய்யப்படுவதால் எதிர்காலத்தில் மக்களுக்கான அரசியல் சார்ந்த சேவைகளை ஆற்றுவதற்கான சந்தர்ப்பங்கள் சீர்குலைந்து போகும் அபாயம் தோன்றியுள்ளது. அதுமட்டுமல்ல, பொது மக்கள் மத்தியிலும் ஒருவகை அச்சமும் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அறவான் படுகொலையானது மிகவும் கண்டிக்கப்பட வேண்டியது. இவ்வாறான படுகொலைகளை, கட்சி பேதங்களை மறந்து உண்மையான ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் கண்டிக்க வேண்டும்.
பயங்கரவாதம் இலங்கையின் ஜனாதிபதியால் அடியோடு வேரறுக்கப்பட்டு நாட்டில் சமாதானமும் அபிவிருத்திக்கான வாய்ப்புகளும் நாட்டு மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுதக் கலாசாரத்தை ஊக்குவிக்கும் தீயசக்திகளின் பின்புலத்தைக் கண்டுபிடிக்க, ஜனநாயகத்தை நாட்டில் ஸ்தாபிக்க விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் தமது ஒத்துழைப்பினை காவல்துறையினருக்கு வழங்க வேண்டும்.
கட்சி உறுப்பினர்கள் சுதந்திரமாக தமது பணியை எதிர்காலத்தில் மேற்கொள்வதற்குக் காவல் துறையினர் பாதுகாப்பளிக்க வேண்டும். நாம் எப்போதும் காவல் துறையினரின் பாதுகாப்பையே முழுமையாக நம்புகின்றோம் என்று தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply