குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டு கைதான பெண்ணுக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு
மத்திய அரசின் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.கடந்த 29-ந்தேதி, சென்னை பெசன்ட்நகரில் கல்லூரி மாணவிகள் சிலர் ஒன்று கூடி வீடுகள் முன்பு திடீரென கோலம் போட்டனர்.
கோலத்துக்கு அருகில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான வாசகங்களையும் அவர்கள் எழுதி வைத்தனர். இது தொடர்பாக 8 பெண்கள் கைது செய்யப்பட்டு விடு விக்கப்பட்டனர். இதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து தி.மு.க. மகளிர் அணியினரும் கோலம் போட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
இந்த நிலையில் கோலம் போட்டு கைதான 8 பேரில் காயத்ரி என்ற பெண்ணுக்கு பாகிஸ்தானை சேர்ந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-
கோலம் போட்டு போலீசில் பிடிபட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட காயத்ரி கந்தாடை என்பவருக்கு பாகிஸ்தான் அமைப்புடன் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
இது தொடர்பாக அவரே தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பேஸ்புக் புரோபைலில் ‘பைட்ஸ் பார் ஆல்’ பாகிஸ்தான் என்கிற நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிறுவனம், “அசோசியேஷன் ஆப் ஆல் பாகிஸ்தான் சிட்டிசன் ஜேனலிஸ்ட்” என்கிற அமைப்பை சேர்ந்ததாகும். இவரது தொடர்பு குறித்தும், பின்னணி பற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம். அறப்போர் இயக்கம், வெல்பரர் பார்ட்டி ஆப் இந்தியா போன்ற இயக்கங்களும் இதற்கு ஆதரவாக உள்ளன. இதுபற்றியும் விசாரணை நடத்தி வருகிறோம்.
கோலம் போட்ட பெண்கள் ஒரு வீட்டின் முன்பு ஏற்கனவே போட்ட கோலத்தின் அருகில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக எழுதியதால் அந்த வீட்டில் வசித்த 92 வயது முதியவர் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது பிரச்சினை ஏற்பட்டதால்தான் போலீசார் சென்று அங்கிருந்து அந்த பெண்களை அப்புறப்படுத்தினர்.
இவ்வாறு கமிஷனர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply